
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த ஜக்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் மணிகண்டன் (ஓட்டுநர்). இவருக்கும் காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனிதா (26) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரோகன் (7) என்ற மகன் உள்ளார்.
திருமணமானது முதல் மாமனார், மாமியார் சிங்காரம்மாள், கணவரின் அண்ணன் ஆனந்தராமன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் வரதட்சணை கேட்டு தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக அனிதா கூறுகிறார்.

*11-ஆம் தேதி தாக்குதல்:*
கடந்த 11-ஆம் தேதி வரதட்சணை கேட்டு தன்னை தாக்கியதில் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், இது தொடர்பாக கம்பைநல்லூர் / கம்மம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகு அழைத்துச் செல்வதாக கூறி அனுப்பியதாகவும் அனிதா குற்றம்சாட்டியுள்ளார்.
*கணவர் மர்ம மரணம்:*
இதற்கிடையே 5 நாட்களுக்கு முன்பு மகனின் படிப்பு செலவுக்காக கணவர் மணிகண்டன் ரூ.15 ஆயிரம் அனுப்பியதாகவும், ஓரிரு நாளில் அழைத்துச் செல்வதாக கூறிய நிலையில், நேற்று (25.10.2026) திடீரென மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாமனார் வீட்டார் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் அனிதா தெரிவித்துள்ளார்.
உடனே உறவினர்களுடன் ஜக்குபட்டிக்கு சென்றபோது, கணவரின் உடலை பார்க்கக்கூட அனுமதிக்காமல் தடுத்ததாகவும், தனது அனுமதியின்றி பிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்று வந்து எரிக்க முயன்றதாகவும், மனைவி என்ற முறையில் இறுதிச்சடங்கு செய்யச் சென்றபோது மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி விரட்டியதாகவும், காவல் நிலையம் முன்பே தாக்கப்பட்டதாகவும் அனிதா புகாரில் கூறியுள்ளார்.
*உறவினர் பூங்கொடி பேட்டி:*
அனிதாவின் உறவினர் பூங்கொடி கூறுகையில், “ஜக்குபட்டியில் திருமணம் செய்து கொடுத்ததில் இருந்தே வரதட்சணை கொடுமை நடந்தது. GH-ல் சேர்ந்தபோது போலீசில் மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். இது தூக்கு போட்டு இறந்தாரா அல்லது அவர்களே ஏதாவது செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. உடலை பார்க்கவும் விடவில்லை, சடங்கு செய்யவும் விடவில்லை” என்றார்.
*சொத்துக்காக கொலையா?*
மேலும் அனிதா, தனது கணவரை சொத்துக்காக அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை என பொய் பரப்புவதாக சந்தேகம் இருப்பதாகவும், மகன் ரோகன் பெயரில் உள்ள சொத்து உயிலை கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, கணவரின் மரணத்தின் உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும், வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply