Categories

மகளிர் சுய உதவிக் குழு அடையாள அட்டைகளில் முறைகேடு – 40 பெண்களின் விவரங்கள் மாற்றப்பட்டதாக ஆட்சியரிடம் புகார்

தர்மபுரி அக் 26,

தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 40 பெண்களின் அடையாள அட்டைகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தங்கள் குழுவின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி வேறு நபர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நாய்க்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சோழக்கொட்டாய் மற்றும் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பகுதியில் பழையூர் மாரியம்மன் மற்றும் திருப்பதி மகளிர் மன்றம் என இரு பிரிவாக 40 பேர் கொண்ட குழுவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, 8 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் திட்டத்தில் VPRC-யில் முறைப்படி பதிவு செய்து, அக்கவுண்ட் எண், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து, 8 ஆண்டுகளாக முறையாக கணக்கு வழக்குகளை அரசுக்கு கொடுத்து வந்துள்ளனர்.



இந்நிலையில் தங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாததால், மகளிர் சுய உதவிக் குழு அட்டை ஏன் கொடுக்கவில்லை என அலுவலகத்தில் சென்று கேட்டபோது தான் முறைகேடு தெரியவந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முனிரத்தினம் கூறியதாவது:

“எங்களது அக்கவுண்டை செக் செய்து பார்த்தபோது, அதில் எங்கள் குழுவில் உள்ளவர்களின் பெயர் எதுவும் இல்லை. வேறு நபர்களின் அக்கவுண்ட் நம்பர், பெயர், ஐடி நம்பர் தான் எங்கள் பதிவு எண்ணில் வருகிறது. எங்களது பழையூர் மாரியம்மன் குழுவில் அக்கவுண்ட் நம்பர், ஐடி நம்பர் எல்லாம் எங்களுடையது தான், ஆனால் போட்டோ மற்றும் ஆதார் நம்பர் மட்டும் வேறு நபர்களுடையது உள்ளது. இது எப்படி பதிவானது என்று கேட்டால், சோலைக்கொட்டாய் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் எனக்கு தெரியாது என்கிறார்கள். அலுவலகத்திலேயே வேலை செய்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. 8 வருடமாக உங்கள் பெயர் இதில் இல்லை என்பதை எங்களிடம் சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்லாமலே கணக்கு மட்டும் வாங்கிச் சென்றுள்ளனர்” என்றார்.

தங்களது சுய உதவிக் குழுவின் பதிவு எண்ணில் தவறாக பதிவாகியுள்ள வேறு நபர்களை நீக்கி, 40 பேருக்கும் 8 வருட பதிவை முறைப்படுத்தி, உரிய அடையாள அட்டைகளை வழங்கி, அரசு உதவிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதே பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.