
அரூர் அருகே காப்புக்காட்டில் மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டி தீ வைப்பு! விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம்!
கண்டுகொள்ளாத மொரப்பூர் வனத்துறை – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? பொதுமக்கள் கோரிக்கை!

அரூர், அக்.28:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள மருதிப்பட்டி பகுதியில் தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் சரகத்திற்கு உட்பட்ட கீழ் மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதும், பின்னர் வந்து அவற்றை தீ வைத்து எரித்துவிட்டு செல்வதும் தொடர் கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முற்றிலும் வனப்பகுதி என்பதால் இவ்வாறு மருத்துவக் கழிவுகளை எரிப்பதால் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படும்போது அதிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையின் காரணமாக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

*விலங்கினங்களுக்கு ஆபத்து:*
கீழ்மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான மான்கள், மயில்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் பறவை இனங்கள் வசித்து வருகின்றன. மருத்துவக் கழிவுகளை கொட்டி எரிப்பதால் ஏற்படும் நச்சுத்தன்மை காரணமாக வனவிலங்குகளுக்கும் தொற்று நோய் பரவி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
*மொரப்பூர் வனத்துறை மீது புகார்:*
இந்த காப்புக்காடு மொரப்பூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், மொரப்பூர் வனத்துறையைச் சேர்ந்த வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முறையாக ரோந்து பணியில் ஈடுபடாததே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தருமபுரி மாவட்ட வனத்துறை இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, மொரப்பூர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனவிலங்குகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகுதிவாழ் மக்கள் தடுமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.














Leave a Reply