
லஞ்சம் பெறுவது தனிமனித குற்றமல்ல; குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழிக்கும் சமூக தீமை!
லஞ்சம் பெறுவோர் குடும்பத்திற்கு அரசு வேலை, சலுகைகளை ரத்து செய்ய புதிய சட்டம் வேண்டும் – மக்கள் ஆவேசம்
லஞ்ச ஒழிப்புத்துறை: ஏமாளியும் v/s ஏமாற்றுபவனும் -ச மூக ஆர்வலர், செய்தியாளர் கனல்.இளம்பரிதி எழுதும் பிரத்யேக சிறப்பு செய்தி –
*சென்னை, அக்.27:*
இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது – சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் தமிழ்நாட்டின் நிஜம் என்ன? அரசு அலுவலக வாசலில் ஒரு ஏழை தன் வாழ்வாதார கோரிக்கைக்காக கையேந்தி நிற்கிறான், உள்ளே ஒரு அதிகாரி கை நீட்டி காத்திருக்கிறார். இங்குதான் ஏமாளியும், ஏமாற்றுபவனும் உருவாகிறார்கள்.
ஒரு கூலித் தொழிலாளி, ஒரு சிறு விவசாயி தன் பட்டாவை வாங்க, தன் மகளின் சாதி சான்றிதழை பெற, தன் முதியோர் உதவித்தொகைக்காக மனு கொடுக்க கடன் வாங்கி லஞ்சம் கொடுத்து ஏமாளியாகிறான். ஒரு பணக்காரனோ தன் காரியத்தை சீக்கிரம் முடிக்க லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்கிறான்.
ஆனால் இந்த இரண்டு லஞ்சத்தையும் வாங்கி தன் குடும்பத்தை சொகுசாக வாழ வைப்பவன் அரசு அலுவலன். அவன் தான் உண்மையான ஏமாற்றுபவன். இந்த புரிதலில் இருந்து தான் இதுவரை யாரும் பேசாத ஒரு புதிய கோரிக்கையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.
*லஞ்சம் என்பது குடும்ப குற்றம்!*
இதுவரை நாம் லஞ்சத்தை தனிமனித குற்றமாகவே பார்த்தோம். ஆனால் உண்மை அதுவல்ல.
ஒரு அரசு அலுவலர் வாங்கும் லஞ்சப் பணம் அவரது சட்டை பையில் மட்டும் தங்குவதில்லை. அது அவரது வீட்டின் சுவராகிறது, மனைவியின் கழுத்தில் தங்கமாகிறது, மகனின் வெளிநாட்டு படிப்பாகிறது, மகளின் ஆடம்பர திருமணமாகிறது. ஆக, லஞ்சத்தின் பலனை அனுபவிப்பது ஒரு குடும்பம் முழுவதும்.
ஆனால் தண்டிக்கப்படுவது? அந்த ஒரு நபர் மட்டும் தான். சில மாத சிறை, பணி இடைநீக்கம், பிறகு மீண்டும் பணி, ஓய்வூதியம் என அனைத்து சலுகைகளையும் அவரது குடும்பமே அனுபவிக்கிறது.
லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிக் கொள்ளும் போது அவமானப்படுவது அவர் மட்டுமல்ல. அவரது பிள்ளைகள் பள்ளியில், கல்லூரியில் “உங்க அப்பா லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்” என்று தலைகுனிய வேண்டியுள்ளது. ஒரு குடும்பமே சமூகத்தில் நிரந்தர அவமானச் சின்னமாகிறது. இந்த அவலம் தமிழ்நாட்டிற்கு தேவையா?
எனவே தான் பொதுமக்கள் இப்போது உரக்க கேட்கிறார்கள்: *லஞ்சம் பெறுவது தனிமனித குற்றமல்ல, அது ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்கும் சமூக தீமை.
தமிழ்நாட்டு மக்களின் புதிய சட்டக் கோரிக்கை – இதுவரை யாரும் சொல்லாத தீர்வு:
தமிழ்நாடு முழுவதும் இன்று பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து எழும் ஒருமித்த குரல் இதுதான். லஞ்சத்தை ஒழிக்க வெறும் கைது மட்டும் போதாது, குடும்பத்தை புறக்கணிக்கும் புதிய சட்டம் வேண்டும்.
1. குடும்பத்திற்கு இனி அரசு வேலை இல்லை: லஞ்சம் பெற்றது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அந்த குடும்பத்தில் இனி எந்த தலைமுறைக்கும் அரசு வேலை வழங்கக் கூடாது. வாரிசு வேலை, கருணை அடிப்படை வேலை கூட முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.
2. அரசு சலுகைகள் முழுமையாக பறிப்பு: இலவச வீட்டு மனை பட்டா, விவசாய கடன் தள்ளுபடி, தொழில் மானியம், இலவச மின்சாரம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் எந்த நலத்திட்ட உதவியும் அந்த குடும்பத்திற்கு இனி வழங்கக் கூடாது.
3. சொத்து பறிமுதல் செய்து மக்களுக்கே வழங்கல்:* லஞ்சப் ப பணத்தில் வாங்கப்பட்ட வீடு, நிலம், நகை அனைத்தையும் அரசுடைமையாக்கி, அந்த பணம் எந்த ஏழைகளிடம் இருந்து பறிக்கப்பட்டதோ, அந்த மக்களின் கல்வி, மருத்துவ நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும்.
இறுதியாக ஒரு உறுதிமொழி:
அரசு சேவை என்பது அனைவருக்கும் பொதுவானது. அதில் லஞ்சத்திற்கு இடமில்லை. ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்யவே இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவோம், லஞ்சம் வாங்குபவரை அடையாளம் காட்டுவோம்.
லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை படைக்க, லஞ்சம் பெறும் குடும்பங்களை அரசு பணியில் இருந்து புறக்கணிக்கும் புதிய சட்டத்தை உருவாக்க ஒன்றுபடுவோம், உறுதி ஏற்போம்!














Leave a Reply