
*பாப்பிரெட்டிப்பட்டி, அக்.31-*
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாலகப்பாடி கிராமத்தில் வீட்டின் முன்பு தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் வெள்ளி செயினை பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 30ம் தேதி இரவு 10.20 மணியளவில், மாலகப்பாடி அருந்ததியர் காலனியை சேர்ந்த சாலம்மாள் 55 என்பவரின் மகளின் வீட்டிற்கு வெளியே இரண்டு நபர்கள் வந்து கதவை தட்டி தண்ணீர் கேட்டுள்ளனர்.
இதனால் பயந்துபோன மகள், தனது தாயாரான சாலம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்து விசாரித்த சாலம்மாளிடம், அந்த நபர்கள் ‘சரக்கு வாங்குவதற்காக வந்தோம்’ என்று கூறியுள்ளனர்.
சாலம்மாள் அவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறிவிட்டு திரும்பியபோது, அங்கிருந்த இருவரில் ஒரு நபர் அவரது பின்னால் வந்து கழுத்தில் அணிந்திருந்த சுமார் 35 கிராம் எடையுள்ள வெள்ளி செயினை பறித்துக்கொண்டு TN 70 AE 1752 என்ற எண் கொண்ட கருப்பு மற்றும் நீல நிற பல்சர் பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சாலம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 188/2026, பிரிவு 304(2) BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய கீழானூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 20 மற்றும் ஸ்ரீகாந்த் 23 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கோபிநாதம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனிராஜ் வழக்கை விசாரித்து வருகிறார்.














Leave a Reply