Categories

ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கையை செயல்படுத்துவாரா தருமபுரி மாவட்ட ஆட்சியர்? – ஊராட்சி செயலாளர்கள் பணிக்கு தருவதில்லை என பொதுமக்கள் புகார்



அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் நியமிக்கப்பட்ட பல பணித்தள பொறுப்பாளர்கள் பல ஆண்டுகளாக ஒரே பஞ்சாயத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு

*தருமபுரி, நவ.1-*

பணித்தள பொறுப்பாளர்களை 100 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்ற ஊரக வளர்ச்சித்துறையின் சுற்றறிக்கையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் செயல்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

*அரசின் உத்தரவு என்ன?*

‘ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் (தற்போது வி.பி.ஜி. ராம் ஜி திட்டம் – VB-G RAM G) பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற வேண்டும்’ என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

‘வி.ஜி., ராம் ஜி’ திட்டத்தின்கீழ் பணியாளர்களை ஒருங்கிணைக்க பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பணியாளர்களை கணக்கிட்டு, பணிகளை ஒதுக்கும் பணியை செய்கின்றனர். இவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிப்பர்.

விதிமுறைப்படி ஒவ்வொரு 100 நாட்களுக்கு ஒருமுறை பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும். ஆனால் பல இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக மாற்றப்படவில்லை என புகார் எழுந்ததை அடுத்து, 100 நாட்களுக்கு மேல் உள்ளவர்களை கணக்கிட்டு உடனே மாற்றும்படி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*தருமபுரி நிலவரம்:*

தருமபுரி மாவட்டம் 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 251 கிராம பஞ்சாயத்துகளையும் கொண்டது. இங்கு அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் நியமிக்கப்பட்ட பல பணித்தள பொறுப்பாளர்கள் பல ஆண்டுகளாக ஒரே பஞ்சாயத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களுக்கு இந்த பணித்தள பொறுப்பாளர்களே முக்கிய காரணம் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

*ஊராட்சி செயலாளர்கள் வருவதில்லை – கூடுதல் புகார்:*

பணித்தள பொறுப்பாளர் நியமனத்திற்கு பிறகு, கிராம ஊராட்சிகளில் அரசு ஊழியராக விளங்கக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணியை முறையாக செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராம ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிவது, அரசுக்கு தகவல் அளிப்பது, குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வது போன்ற பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்வதில்லை. இதுவே கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் வி.பி.ஜி. ராம் ஜி திட்டம் ஜூலை 1 முதல் 125 நாட்கள் உத்தரவாதத்துடன் அமலில் உள்ளது. மேலும் தமிழக அரசு கூடுதலாக 25 நாட்கள் சேர்த்து 150 நாட்களாக உயர்த்தி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

*பொதுமக்கள் கோரிக்கை:*

ஊராட்சி தேர்தல் காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் நாள்தோறும் கிராம ஊராட்சிகளுக்கு சென்று, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் குறைகளை தீர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும் என தருமபுரி மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களை கணக்கெடுத்து புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.