
குடியிருப்புகளுக்கு அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு – பொதுமக்கள் அச்சம்!
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!
ஊட்டி, நவ. 12–
நீலகிரி மாவட்டம் உதகை ஃபன் சிட்டி குடியிருப்புப் பகுதியில் மாலை நேரத்தில் கரடி ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே நடமாடி வருகின்றன.
இந்த நிலையில், ஃபன் சிட்டி குடியிருப்புப் பகுதியில் மாலை நேரத்தில் கரடி ஒன்று நடந்து சென்றது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக மாலை நேரங்களில் சிறுவர்கள் விளையாடுவதும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளதால், கரடியின் நடமாட்டம் குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும், வனவிலங்குகளை நெருங்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கரடிகள் நடமாடுவதைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாலை நேர நடைப்பயிற்சிக்கு வந்ததுபோல் ஃபன் சிட்டி குடியிருப்புப் பகுதியில் ஒய்யாரமாக நடந்து சென்ற கரடியின் வருகை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!














Leave a Reply