
அரூர், நவ. 12:
தர்மபுரி மாவட்டம் அரூரில் பொதுமக்களுக்கு எளிதில் நீதி கிடைக்கும் வகையில், நடமாடும் இ-சேவா குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த அரூர் நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவநந்தினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி விஜயன், மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) சரண்யா, குற்றவியல் நடுவர் தினகரன், காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சிவகுமார், மதன், செந்தில்குமார், சித்தார்த்தன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமானவரின் வழிகாட்டுதலின்படி, அரூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாகனம் மூலம் அரூர் நகரம், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடி அலையாமல், சட்டப் பணிகள் ஆணைக்குழு வழங்கும் இலவச சட்ட உதவிகள் மற்றும் நடமாடும் இ-சேவா வாகன சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
நீதியை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.













Leave a Reply