
தர்மபுரி நவ 17,
மதுரை தனிஷ்க் ரூ.20 கோடி கொள்ளை வழக்கு: தருமபுரி சேஷம்பட்டியில் சினிமா பாணியில் கைது – அதியமான்கோட்டையில் இருந்து மதுரைக்கு மாற்றம்
தமிழகமே எதிர்பார்த்த கைது சாதாரண சம்பவமாகி விட்டதா? – காலதாமத அறிக்கையால் செய்தியாளர்கள், பொதுமக்கள் அதிருப்தி – இருந்தாலும் தருமபுரி போலீசுக்கு ஒரு சல்யூட்!
தமிழகத்தையே உலுக்கிய மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த், தருமபுரி அருகே சேஷம்பட்டியில் சினிமா பாணியில் கைது செய்யப்பட்டார்.

ரூ.20 கோடி கொள்ளை – பின்னணி என்ன?
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி அதிகாலை, சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மாடக்குளம் மலையடிவாரம் மற்றும் அருகிலுள்ள விளைநிலங்களில் சாக்குப்பையில் கட்டி மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.
ஏற்கனவே நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தன. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி தருமபுரியில் கைது செய்யப்பட்டது, தமிழக அளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், செய்தியாளர்கள் எதிர்பார்த்தனர்.
*தப்பிக்க முயன்றது எப்படி? – சினிமாவை மிஞ்சும் தப்பித்தல்:*
கொள்ளைக்குப் பிறகு நிஷாந்த், மதுரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளார். சேலம் வந்ததும் வாகனத்தை ஒரு இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, அரசு பேருந்தில் பெங்களூரு நோக்கி சென்றுள்ளார்.
அரசு பேருந்தில் செல்லும்போது தம்மை யாரோ பின்தொடர்வதாக உணர்ந்த நிஷாந்த், ஓசூர் அருகே வனப்பகுதி அருகே இறங்கி சிறிது நேரம் மறைந்திருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சேலம் நோக்கி வருவதற்காக ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் ஏறியுள்ளார்.
ஆம்னி பேருந்தில் ஏறியதும் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் போன் வாங்கி, வழக்கறிஞருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதைக் கேட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், தமக்கு தெரிந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் அதியமான்கோட்டை காவல்துறையினர், மதுரை தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரை தனிப்படையினர் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததாக கூறப்படும் நிலையில், தருமபுரி சேஷம்பட்டி அருகே உள்ள ஒரு பேக்கரி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக அனைத்து கதவுகளையும் மூடிவிட்டார்.
அந்த நேரத்தில் ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் உள்ள கதவு வழியாக தப்பிக்க நிஷாந்த் குதிக்க முயன்றபோது, அங்கு முன்கூட்டியே வந்திருந்த தனிப்படையினரும், அதியமான்கோட்டை காவல்துறையினரும் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
*காவல்துறை அறிக்கை என்ன சொல்கிறது?*
தருமபுரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.11.2026 அன்று அதிகாலை தருமபுரி வழியாக சென்ற தனியார் பேருந்தில் நிஷாந்த் (23) பயணம் செய்ததாகவும், அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பேருந்து ஓட்டுநர் திரு. மாதேஸ்வரன், அதியமான்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் A.C. முருகன் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இரவு ரோந்துப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் தலைமைக் காவலர் A.C. முருகன் ஆகியோர் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோதனை மேற்கொண்டு, பேருந்தில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்ற நிஷாந்தை பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர் மதுரை தனிஷ்க் நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த எதிரி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேல் விசாரணைக்காக அவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
உரிய நேரத்தில் தகவல் அளித்த பேருந்து ஓட்டுநர் திரு. மாதேஸ்வரன் மற்றும் அதியமான்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் A.C. முருகன், காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோரை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், பாராட்டியுள்ளார்.
*அதியமான்கோட்டையில் இருந்து மதுரைக்கு மாற்றம்:*
கைது செய்யப்பட்ட நிஷாந்த், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து மதுரை தனிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
*தாமத அறிக்கை – செய்தியாளர்கள், அதிருப்தி:*
இது தொடர்பாக அதியமான்கோட்டை காவல்துறையினர் முதலில் தகவல் தெரிவிக்க மறுத்து வந்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை செய்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பதில் கொடுக்காததால் செய்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோன்ற கொள்ளை வழக்குகளில் ஈடுபடுவோரை உடனுக்குடன் பொதுமக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவது அரசின் கடமை, குறிப்பாக காவல்துறையின் கடமை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நபர்களை அடையாளம் காட்டாமல், காலதாமதமாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தது வருத்தத்திற்குரியது என்றும், கைது செய்யப்பட்டவரை அடையாளப்படுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் செய்தியாளர்கள் எதிர்பார்த்தனர்.
தமிழகமே எதிர்பார்த்த இந்த சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் சாதாரண சம்பவமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
*இருந்தாலும் தருமபுரி போலீசுக்கு ஒரு சல்யூட்!*
காலதாமத அறிக்கை வருத்தமான செய்தியாக இருந்தாலும், தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கைது செய்தது போலவே அனைத்து வழக்குகளிலும் உண்மை தன்மையை அறிந்து உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், தருமபுரி மாவட்டத்தை போதை, கஞ்சா இல்லாத மாவட்டமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கக்கூடிய மாவட்டமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தலைமறைவு குற்றவாளிகளை கண்டறிவதில் பொதுமக்களின் விழிப்புணர்வும், காவல்துறைக்கு உரிய நேரத்தில் அளிக்கப்படும் தகவல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது அவசர உதவி எண் 100-க்கோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.














Leave a Reply