Categories

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் திறப்பு – 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தேனி அக் 27,
ராமநாதபுரம் மாவட்ட விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த சில மாதங்களாகவே மதுரை திண்டுக்கல் மாவட்ட முதல் போகம் மற்றும் ஒருபோக பாசனத்திற்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வைகை அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம் சிவகங்கை மதுரை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அரசகு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு மூன்று கட்டமாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக வைகை அணையின் பூர்வீக பாசன பகுதியான ராமநாதபுரம் மாவட்ட விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் ஏழு பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. பாசனத்திற்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் சேர்த்து வினாடிக்கு 3,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் மீண்டும் தரையில் மூழ்கியது. இதன் காரணமாக அந்தப் இருபுறமும் அடைக்கப்பட்டு பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தமாக 624 மில்லியன் கன அடி தண்ணீர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக சிவகங்கைக்கும் மதுரை மாவட்டத்திற்கும் தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ, கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் மேய்க்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.