
நீலகிரி அக் 24,
நீலகிரியில் இருந்து கோவை வந்த அரசு பேருந்து மீது நிலச்சரிவு” ; பர்லியார் அருகே மரம் மற்றும் மண் சரிந்து விழுந்து கோர விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம்!
நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்தில் பேருந்தில் சிக்கியவர்கள் குறித்த விவரம் சேகரிப்பு: மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் போராட்டம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வந்து கொண்டு இருந்த அரசுப் பேருந்து ஒன்று, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் அமைந்து உள்ள பர்லியார் (Burliar) அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மலையில் இருந்து சரிந்து விழுந்த ராட்சத மண் சரிவு மற்றும் மரங்கள் பேருந்தின் மீது சாய்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப் பாதைகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பர்லியார் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், இரவுப் பணியை முடித்து விட்டுப் பயணிகளுடன் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து பர்லியார் பகுதிக்கு அருகில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக மலையின் மேல் பகுதியில் இருந்து திடீரெனப் பெரும் பாறை மண்களுடன் சரிந்து விழுந்ததோடு, ராட்சத மரங்களும் பேருந்தின் மீது முறிந்து விழுந்தன.
இந்த திடீர் விபத்தால் பேருந்து நிலைகுலைந்து அப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
நள்ளிரவு நேரம் என்பதால் விபத்து குறித்த தகவல் உடனடியாக வெளிவராத நிலையில், தற்போது தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பேருந்தின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத மரங்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
பயணிகள் நிலை என்ன?
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் எத்தனை பயணிகள் பயணம் செய்தனர் மற்றும் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
தொடர் மழைக் காரணமாக மலைப்பாதைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.














Leave a Reply