
தர்மபுரி டிச 9,
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரம், சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்ந்திருந்தாலும், தூய்மைப் பணிகளில் நிலவும் அலட்சியம் தற்போது குடியிருப்போரின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2025 செப்டம்பரில், அரூர் பேரூராட்சியுடன் மோப்பிரிப்பட்டி மற்றும் தொட்டம்பட்டி ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய அரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.

1945-இல் பேரூராட்சியாகத் தொடங்கிய அரூர், 1969 -இல் தேர்வு நிலை பேரூராட்சியாக, 2023-இல் சிறப்பு நிலை பேரூராட்சியாக, இறுதியில்
2025-இல் நகராட்சியாக உயர்ந்தது.

இந்த முன்னேற்றத்தை 2024 ஜூலை 11 அன்று முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அரூர் நகரத்தின் நிலைமைகள்
தருமபுரி நகரத்திலிருந்து
40 கி.மீ. தொலைவில் உள்ள அரூர் நகரம் தற்போது 21.69 சதுர கி.மீ. பரப்பளவில்
30 வார்டுகளைக் கொண்டுள்ளது.

நகரத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 48,000.
பஸ் நிலையம், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் என அடிப்படை வசதிகள் இருந்தாலும், தூய்மை பணிகள் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நகராட்சி ஆண்டு வருவாயாக ₹7.50 கோடி இருப்பதுடன், 100 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 43 பேர் தூய்மைப் பணியாளர்கள். தினசரி சுமார் 7 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும்,
மழைக்காலத்தில் குப்பைகள் குவிந்து சாலைகளில் துர்நாற்றம் வீசுகிறது.
குப்பை தேங்கலால் நோய் பரவல் அபாயம் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறாததால், மூலை முடுக்குகளிலும், கால்வாய்களிலும் குப்பை தேங்கி நிற்கிறது.
இதனால் டெங்கு, சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகம் பாதிக்கப்படுவதாக குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபடுகிற பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்வதாலும் அவர்களின் உடல்நலமும் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் கோரிக்கை
நகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றல், சாலைகள் மற்றும் கால்வாய் சுத்தம், கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை தெளிவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரூர் நகராட்சி அலட்சியம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,
பொது சுகாதாரப் பிரச்சினைகளை தவிர்க்க உடனடி சீரமைப்பு தேவைப்படுவதாக வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.














Leave a Reply