Categories

உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு: ராமாபுரத்தில் பரபரப்பு – காவல் மற்றும் வருவாய் துறையின் துரித நடவடிக்கையால் மோதல் தவிர்ப்பு

அரூர், நவ. 11:*

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில், பொது பாதையில் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவான நிலையில், காவல் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜமாணிக்கம் (60) இறந்துவிட்டார். அவருக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்காக ராமாபுரம் அருந்ததியர் காலனி வழியாக எடுத்து சென்றனர்.



அப்போது, அந்த காலனியை சேர்ந்த மக்கள், “இந்த வழியில் உடலை எடுத்து செல்லக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் 5 மணி நேரமாக உடல் ராமாபுரம் நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது.

உடலை கொண்டு செல்ல விடாத வகையில், ராமாபுரம் மக்கள் பெண்கள் உட்பட அனைவரும் தார் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

*காவல்துறையின் உடனடி களப்பணி:*

இது குறித்து தகவல் கிடைத்ததும், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் கூடியிருந்த இரு தரப்பு மக்களையும் அமைதிப்படுத்தி, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடமும் எந்த ஒரு பிரச்சினையும், மோதலும் ஏற்படாத வகையில் சாலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

*டி.எஸ்.பி. தலைமையில் பல மணி நேர பேச்சுவார்த்தை:*

இறந்து போன ராஜமாணிக்கத்தின் உறவினர்களிடமும், எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரிடமும் டி.எஸ்.பி. சதீஷ்குமார் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் பொறுமையாக கேட்டறிந்தார். ஏற்கனவே தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்த நிலையில் உடலை எடுத்து வந்தபோது, எதிர் தரப்பை சேர்ந்த மக்கள் தங்கள் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததாகவும், உடலை எடுத்து செல்ல வேறு பாதை இருக்கும்போது, திட்டமிட்டு அருந்ததியர் காலனி தெரு வழியாக எடுத்து வந்து பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

*வட்டாட்சியர் – டி.எஸ்.பி. இணைந்து முடிவு:*

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையிலும், டி.எஸ்.பி. சதீஷ்குமார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, வட்டாட்சியர் மனோகரன் மற்றும் டி.எஸ்.பி. இருவரும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இறுதியான முடிவு எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

முறையாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

*போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்:*

காவல்துறையின் இந்த உறுதியை ஏற்று, எதிர் தரப்பினர் சமாதானம் அடைந்ததை அடுத்து, மீண்டும் அருந்ததியர் காலனி வழியாகவே போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.

இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்கு நிரந்தர பாதை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

காவல் மற்றும் வருவாய் துறையினரின் துரித நடவடிக்கை மற்றும் பொறுமையான பேச்சுவார்த்தையால், பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.