
கோவை நவ 12,
பாலக்காடு ரயில் கொள்ளையில் திண்டுக்கல் நடிகர் கைது : 600 சி.சி.டி.வி, 5 பஸ்கள் மாற்றி டிஜிட்டல் சாகசம் செய்த கில்லாடி!
திரைப்படங்களில் நடிக்கும் ஆசை, சோஷியல் மீடியாவில் லட்சக் கணக்கான ஃபாலோயர்கள், ஊருக்குள் தாராளப் பிரபு வேஷம்… ஆனால், நிஜ வாழ்க்கையில் ரயில்களில் கைவரிசை காட்டும் கொடூர கொள்ளையன். சினிமா கதையையே மிஞ்சும் வகையில் பாலக்காடு ரயிலில் 50 பவுன் நகையைத் திருடி, ஊருக்குள் தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்த ‘இரட்டை வாழ்க்கை’ வாழ்ந்த நடிகரை கேரள காவல் துறையும் ரயில்வே பாதுகாப்புப் படையும் (RPF) இணைந்து கோவையில் வளைத்துப் பிடித்து உள்ளனர்.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சென்னை – திருவனந்தபுரம் மெயில் ரயிலில் (S4 பெட்டி) 66 வயதான குமாரி என்ற மூதாட்டி பயணித்தார். தனது பேத்தியின் திருமணத்திற்காகக் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துச் சேமித்த சுமார் 47 பவுன் (சுமார் 50 பைசா/பவுன்) தங்க நகைகளை படுக்கைக்கு அடியில் வைத்து இருந்தார்.
ரயில் பாலக்காட்டை நெருங்கிய போது நகைப் பை மாயமாகி இருந்ததைக் கண்டு மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் கதறித் துடித்தனர்.
குற்றவாளி தப்பிப்பதற்காகப் பயன்படுத்திய மிகத் தந்திரமான உத்திகள்:
1. ரூட் டைவர்ஷன்:
தடயங்களை மறைக்கச் சென்னையில் இருந்து சேலத்திற்கு ஒரு ரயிலிலும், சேலத்தில் இருந்து பாலக்காட்டிற்கு வேறு ஒரு ரயிலிலும் பயணித்து உள்ளார்.
2. 5 பஸ்கள் மாற்றிப் பயணம்:
பாலக்காடு நிலையத்தில் இறங்கி KSRTC பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றவர், போலீஸாரைத் திசை திருப்ப 5 வெவ்வேறு பேருந்துகளில் மாறி மாறிப் பயணித்து உள்ளார்.
3. மாஸ்க் & கேமரா எஸ்கேப்:
சி.சி.டி.வி கேமராக்களைப் பார்க்கும் போதெல்லாம் கைகளால் நெற்றியை மூடிக்கொள்வது, முகம் தெரியாதவாறு மாஸ்க் அணிவது மற்றும் பயணத்தின் நடுவே ஆடைகளை மாற்றுவது எனப் பக்காவாகத் திட்டமிட்டு உள்ளார்.
600 சிசிடிவி கேமராக்கள்… 1 வாரத்தில் அதிரடி வேட்டை!
கேரள ரயில்வே எஸ்.பி கிருஷ்ணகுமார் IPS மற்றும் ஆர்.பி.எஃப் DSC அம்பு பி.குமார் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் சுமார் 600 சி.சி.டி.வி (CCTV) கேமரா பதிவுகளை அறிவியல் பூர்வமாகப் பகுப்பாய்வு செய்தனர்.
10 சந்தேக நபர்களில் இருந்து 5 பேராகக் குறைத்து, டிஜிட்டல் தடயவியல், சோஷியல் மீடியா டிராக்கிங் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை வைத்து நடத்திய மின்னல் வேக விசாரணையில் குற்றவாளி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்பதை உறுதியாக்கி, கோயம்புத்தூரில் உள்ள அவரது வாடகை வீட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 36.42 பவுன் தங்கம் முதற்கட்டமாக மீட்கப்பட்டது.
ஊருக்குள் ‘நல்லவன்’… கோவையில் சொகுசு வாழ்க்கை!
கைதான பாலமுருகனின் நிஜ முகம் வெளி வந்த போது காவல் துறையினரே மிரண்டு போயினர்:
சினிமா & எடிட்டர்:
இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடிகராகவும், வீடியோ எடிட்டராகவும் பணியாற்றி வந்து உள்ளார்.
தீபாவளித் தாராளம்:
திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு திண்டுக்கல்லில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் ஜாலியாகத் தீபாவளி கொண்டாடி உள்ளார். ஊர் மக்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்கி, ஆன்மீகவாதி போலவும் கருணை உள்ளம் கொண்ட கொடை வள்ளல் போலவும் சீன் போட்டு உள்ளார்.
பயணிகளைக் குறிவைக்கும் கேங்:
இவர் ஏற்கனவே மதுரையில் ரயிலில் லேப்டாப் திருடிய வழக்கில் 40 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பதும், ரயில்களில் பயணிகளின் உடமைகளைக் குறிவைக்கும் பெரிய கொள்ளைக் கும்பலின் முக்கிய நபராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்து உள்ளது.
ஒரு வாரமாக இரவும் பகலும் தூக்கமின்றி உழைத்து, மூதாட்டியின் கண்ணீரைத் துடைத்து நகையை மீட்டுத் தந்த கேரள காவல் துறை மற்றும் RPF கூட்டுப் படையினருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.














Leave a Reply