Categories

பாப்பிரப்பட்டி அருகே 80 அடி ஆழ கிணற்றில் மண் சரிந்து விவசாயி பலி – 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்பு



தருமபுரி மாவட்டம் பாப்பிரப்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள கிணற்றைத் தூர்வாரும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய விவசாயி, சுமார் 20 மணி நேர மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தருமபுரி மாவட்டம், பாப்பிரப்பட்டி அருகே உள்ள பணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 57) விவசாயியான இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள்களும் உள்ளனர்.
முருகன் தனது விவசாயக் கிணற்றைத் தூர்வாரி, கிணற்றைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக நேற்று கூலித் தொழிலாளர்களுடன் இணைந்து கிணற்றின் கரையோரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, தொடர் மழையால் ஈரப்பதம் அதிகரித்து பலவீனமடைந்திருந்த கிணற்றின் கரைப்பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் கரையோரத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்த முருகன், மண்ணுடன் சேர்ந்து கிணற்றுக்குள் சரிந்து விழுந்தார்.
மேலும், சுமார் 15 அடி உயரத்திற்கு மண் சரிந்து முருகனை மூடியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த உடன் பணியாற்றிய தொழிலாளர்கள், உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் சிக்கிய முருகனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், சுமார் 80 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சுமார் 30 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்ததால், மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தண்ணீரை முழுமையாக வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டதுடன், இரவு நேரமானதால் மீட்புப் பணிகளும் சவாலாக மாறின.
இதற்கிடையே தொடர்ந்து மழை பெய்ததால், பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனால், கிணற்றுக்குள் சிக்கியிருந்த முருகனை உயிருடன் மீட்க முடியுமா என்ற எதிர்பார்ப்புடன் குடும்பத்தினரும் உறவினர்களும் காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணி முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சேற்றிலும் மண்ணிலும் சிக்கியிருந்த முருகனின் உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு முருகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மீட்கப்பட்ட முருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மீட்புப் பணியில் பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருத்தணிமுருகன், சேட்டு, ராஜ்குமார், பரமசிவம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

மேலும், பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறையினரும் மீட்புப் பணியில் பங்கேற்றனர்.
தொடர் மழையின் காரணமாகக் கிணற்றின் கரையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம், பணைக்குளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி  மாவட்ட
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772