Categories

கோவையில் பாரம்பரிய வேளாண் முறைகள் குறித்து– விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம்!


கோவை அக் 29,
கோவை மாவட்டம், கோட்டூர் அருகே மலையாண்டிபட்டணத்தில், பாரம்பரிய வேளாண் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாணவராயர் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

மலையாண்டிபட்டணம் வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில், வேளாண்மைத் துறை சார்பில் கேத் பச்சாவ் அபியான் திட்டத்தின் கீழ், அக்டோபர் 29-ஆம் தேதி விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம். மணிகண்டன், செயலாளர் கே. கோபிநாத், பொறுப்பாளர் எஸ். காளீஸ்வரன் மற்றும் கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பத்து மாணவிகள் பங்கேற்றனர்.

கிராம தங்கல் திட்டத்தின் கீழ், ஆனைமலை வட்டாரத்தில் 75 நாட்கள் தங்கிப் பயிற்சி பெற்று வரும் மாணவிகள், விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

இதில், ஆமணக்குப் புண்ணாக்கு, தயிர், வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு மண் பானைப் பொறி தயாரித்து, காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து பிடிக்கும் பாரம்பரிய முறையை விளக்கினர்.

மேலும், எருக்கஞ்செடியின் இலைகள் மற்றும் தாவரப் பகுதிகளைத் தென்னை மரங்களைச் சுற்றியுள்ள பாத்திகளில் இட்டு மண்ணால் மூடுவதன் மூலம், அவை மட்கி மண்ணுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கும் முறையையும் எடுத்துரைத்தனர். இம்முறை தென்னையில் போரான் சத்துக் குறைபாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் குறும்பைகள் உதிர்வதைக் கட்டுப்படுத்த உதவும் பாரம்பரிய முறையாக விளக்கப்பட்டது.

உள்ளூரில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் வேளாண்மை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் செயல்விளக்கத்தில் வாணவராயர் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விண்ணரசி, ஹரிப்பிரியா, ஷர்மிளா, மோத்திகா, பிரியதர்ஷினி, ஸ்ரீ கனிஷ்கா, கனிகா, பிரதிபா, சக்தி பாலா செள மற்றும் அசின் ஆகியோர் பங்கேற்றனர்.