Categories

அதிமுக அமைச்சரவையில் பொறுப்புடன் பேசிய ஒரே அமைச்சர் பழனியப்பன் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு: .

தர்மபுரி டிச 14

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்ல திருமண விழா பிரமாண்டமாக நடைபெற்றது.



மணமக்கள் எழில் மறவன் மற்றும் கிருத்திகா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணத்தை நடத்திவைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.




இந்த விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய

முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஜிடிபி வளர்ச்சியில் நாம் முன்னணியில் உள்ளோம். இதை எங்கள் அரசு கூறவில்லை,
ரிசர்வ் வங்கியே வெளியிட்டுள்ளது. சோதனைகள் அனைத்தையும் தாண்டி சாதனை படைத்திருப்பது திராவிட மாடல் ஆட்சியே” என தெரிவித்தார்.

“பெண்களுக்கு நலத்திட்டமாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது மூலம் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு பலன் கிடைத்துள்ளது.

இன்னும் தகுதி பெற்றவர்கள் விடுபட்டு இருந்தால், அவர்கள் மனு அளித்தால் நிச்சயம் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்றும் கூறினார்.



அதிமுக ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்திய அவர், “அந்த அமைச்சரவையில் எந்த ஊரின் அமைச்சரும் பொறுப்பாக பேசியதில்லை.
ஒரே ஒருவரே பொறுப்புடன் பேசியவர் — அதுவும் பழனியப்பன். மற்ற அமைச்சர்கள் பேசும்போது பலமுறை நாங்கள் நடுவில் வெளியேறியதுண்டு. ஆனால் பழனியப்பன் பேசும்போது நாங்கள் அமைதியாக கவனித்தோம்.

ஜனநாயக கண்ணியம், அன்பு மற்றும் நாகரிகத்துடன் நடந்துகொண்டவர் அவர்” என பாராட்டினார்.

அதேவேளை, “தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும், அதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது” எனவும் அவர் வலியுறுத்தினார்.