Categories

கட்சி மாறும் வதந்திக்கு முற்றுப்புள்ளி! அதிமுக தான் என் இயக்கம் – எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்




*கோவை அக் 17,:* அதிமுக என்றும் சிறந்த இயக்கம், மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் தனது எம்.எல்.ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“அதிமுகவின் இன்றைய நிலை நன்றாகவே உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா வளர்த்த இயக்கம். 31 ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கம். எங்கள் ரத்தத்தில் அதிமுக தான் ஓடுகிறது.

எனது வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருவது சகஜம். அதை வைத்து எனது வீட்டில் கூட்டம் நடப்பதாக செய்தி போடுகிறார்கள். நான் எங்கும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.

கடந்த தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் இந்த முறை தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. தாராபுரம் தொகுதியில் எனது தலைமையில் தேர்தல் பணிகளை பார்த்தேன். கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வரை எதிர்பார்த்தோம், ஆனால் அதில் பாதி வாக்குகள் தான் கிடைத்துள்ளது. இரட்டை இலைக்கான வாக்கு குறைந்துள்ளது வருத்தமே.

இந்த தேர்தலில் எங்களுக்கு 4 பூத்துகள் ஒதுக்கப்பட்டிருந்தது. சடையம்பாளையம், குன்னத்தூர் பகுதிகளில் உள்ள 25, 26, 27, 28 ஆகிய பூத்துகளில் நாங்கள் முழுமையாக பணியாற்றினோம். அதில் இரண்டு பூத்துகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தந்துள்ளோம்.

என்னைப்பற்றி யூடியூப்களில் இவர் அங்கே போகிறார், இங்கே போகிறார் என்று செய்தி பரப்புகிறார்கள். அந்த கேள்விக்கே இடமில்லை. இது எங்கள் இயக்கம், எங்களை உருவாக்கியது அம்மா. இந்த இயக்கத்தை விட்டு நாங்கள் ஏன் போக வேண்டும்?

கோவை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பாலங்கள், சாலைகள், ஸ்மார்ட் சிட்டி, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். எழில்நகர் வீட்டு வசதி திட்டத்தைக் கூட அம்மா ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தது தான்.

பதவி கொடுத்து எங்களை வளர்த்தது அம்மா தான். உள்ளாட்சித்துறை அமைச்சர் வாய்ப்பு உள்ளிட்ட பெரிய வாய்ப்புகளை அம்மா கொடுத்தார்.

தற்போது கோவைக்கு அத்திக்கடவு – அவிநாசி திட்டம், சிங்காநல்லூர் மேம்பாலம், அவிநாசி ரோடு பைபாஸ் மேம்பாலம், இ.எஸ்.ஐ ரோடு உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் தேவை. இதை சட்டமன்றத்தில் கோரிக்கையாக வைத்துள்ளேன்.

பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், மாநகராட்சி கவுன்சிலர் என பலர் பதவிக்காக காத்திருந்தார்கள். அவர்களை அந்த பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது நிறைவேறாதது வருத்தம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரட்டை இலைக்கு வாக்களித்து உழைக்கும் தொண்டர்களை பார்க்க வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும்.

பொதுச்செயலாளர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பாக பலப்படும், அம்மா நினைத்தது போல் நூறு ஆண்டுகள் தொடரும், மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்றார்.