
கோவை மார் 19,
கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிநீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறுவாணி அணை நீர் 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதுடன், வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்படுகிறது.
49.5 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில், பாதுகாப்பு காரணங்களால் 44 அடி வரை மட்டுமே நீர் சேமிக்க கேரள அதிகாரிகள் அனுமதி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால் அணை நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு தினசரி 10 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சமீப நாட்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் நீர்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாக குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால், பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.














Leave a Reply