
கோவை அக் 24,
கோவை கே.கே.நாயுடு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த பட்டியலின மாணவன் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில்
திராவிடர் தமிழர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெண்மணி கலந்து கொண்டு பேசினர்.
வழக்கறிஞர் வெண்மணி கூறியதாவது:*
“சம்பவம் 21-ம் தேதி நடந்தது. இன்றோடு 4 நாட்கள் ஆகப்போகிறது. வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும். எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் இருப்பதும், வன்கொடுமை பிரிவு இருப்பதும் தான் கைதுக்கான அடிப்படை முகாந்திரம். அந்த முகாந்திரம் இருந்தும் இதுவரை கைது செய்யவில்லை.
விஜயகுமாரும், அருண்குமாரும் பேரமேடு காவல்துறை கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஏன் இதுவரை ஜூடிசியல் கஸ்டடி காட்டவில்லை?
காவல்துறை முதலில் குற்றவாளிகளை கைது செய்து, பின்னர் ஜூடிசியல் கஸ்டடி காட்டி, அதன் பின் கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால் எவிடன்ஸை கலெக்ட் செய்த பிறகு தான் கைது செய்வேன் என்பது ஒருசார்பான மனநிலை.
ஒரு மோட்டார் வாகன விபத்து நடந்தாலே டிரைவர், ஆர்.சி ஓனர் எல்லாம் குற்றவாளி ஆவார்கள். அப்படி இருக்கும்போது அருண்குமார், விஜயகுமார் மட்டுமல்ல, மேனேஜிங் டிரஸ்டிகளான சத்யநாராயணா, சுதர்சினி இருவரும் தான் குற்றவாளிகள். பள்ளியை தொடங்குவது மட்டுமல்ல, அது சரியாக நடக்கிறதா என்று பார்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.
இது முழுக்க முழுக்க டிரஸ்டை காப்பாற்றவும், ஆசிரியர்களை காப்பாற்றவும் காவல்துறை திட்டமிட்டு இழுத்தடிக்கும் முயற்சியாக தெரிகிறது.
இவை அனைத்தும் நான்-பெயிலபிள் செக்சன். எஸ்.சி/எஸ்.டி பிரிவு நான்-பெயிலபிள், 308 தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவும் நான்-பெயிலபிள் தான். நாங்கள் கூடுதலாக RTE சட்டம் பிரிவு 17(1), 17(2) மற்றும் ராகிங் சட்டத்தையும் சேர்க்க சொல்கிறோம். ஆனால் போலீசார் அப்பாவி மாணவர்களை ஜூடிசியல் கஸ்டடிக்கு அனுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அகிலனின் பெற்றோருக்கு குழந்தைகளை ஜூடிசியல் கஸ்டடிக்கு அனுப்புவதில் உடன்பாடு இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே, ‘மாணவர்கள் சாதிய மனநிலையில் இருந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள், ஏன் அரெஸ்ட் செய்கிறீர்கள்? குற்றவாளிகள் விஜயகுமாரும், அருண்குமாரும் தான்’ என்கிறார்கள். அவர்களை கைது செய்யாமல் குழந்தைகளை கைது செய்து, பொதுமக்களை அகிலனின் பெற்றோருக்கு எதிராக திருப்பும் மோசமான செயலை காவல்துறை செய்துள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால் சடலத்தை வாங்கப்போவதில்லை. அது நான்கு நாட்களானாலும் சரி, 40 நாட்களானாலும் சரி, அதில் உறுதியாக இருக்கிறோம்.
அகிலனின் தந்தை அசோக் குமார் மிக தெளிவாக, ‘அனைத்து இயக்கங்களும் எங்களை விட்டு போனாலும், சொந்தக்காரர்கள் விட்டு போனாலும், தனி ஒரு மனிதனாக என் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுவேன்’ என்று கூறியுள்ளார். என் மகன் எதற்காக இறந்தான் என்று கூட தெரியாமல் எப்படி தூங்க முடியும் என்ற தாய், தந்தையின் மனநிலையில் இருந்து இந்த வழக்கை பார்க்க வேண்டும்” என்று பேசினார்.














Leave a Reply