Categories

தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் -மாநில துணைத்தலைவர் தேவதாஸ் பேட்டி

வாணியம்பாடி, டிச.9-
தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் 15 ஆயிரம்  உள்பட  தமிழக அரசு அளித்த  வாக்குறுதிகளை நிறைவெற்ற வேண்டும் என்று வாணியம்பாடியில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சென்னை பனகல் மாளிகை அருகில்
அருகே உள்ள உள்ளாட்சி பணியாளர்கள் அலுவலகம் முன்பாக நேற்று தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ஊரக வளர்ச்சித் துறை தொழிற்சங்கம் சார்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை தொழிற்சங்க மகளிர் அணி மாநில துணைத் தலைவர் நிர்மலா தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனை அறிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு செட்டியப்பனூர் பகுதியில் உள்ள் அவரது வீட்டிற்கு சென்ற போலீஸார் நிர்மலாவை போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்றும்,  மீறி சென்றால் கைது செய்து விடுவோம் என மிரட்டும் தொணியில் பேசி வீட்டின் அருகிலேயே 2 காவலர்கள் நின்று நிர்மலாவை வீட்டுச் சிறை வைத்தது போல் வெளியேற முடியாமல் செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து ஏ.ஐ.டி.யூ.சி மாநில துணை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தொழிற்சங்கம் நிர்வாகிகள் நேரில் சென்று தமிழக போலீஸாரின்  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு 15 ஆயிரம் மாத ஊதியம்  வழங்கப்படும் என எதிர்கட்சியாக இருந்த திமுக வாக்குறுதியை அளித்திருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய்  ஊதியம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது. ஆயினும் இதுவரை அதனை  நிறைவேற்றவில்லை.
மேலும் கொரோனா காலத்தில் தூய்மை பணி செய்த  பணியாளர்களுக்கு  நிவாரணத் தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு என கூறிக் கொள்ளும் திமுக அரசு தூய்மை  பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
பேட்டியின் போது ஊரக வளர்ச்சித் துறை தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் நிர்மலா, ஏ.ஐ.டி.யூ.சி நகர செயலாளர் சிராஜ் கான், தொழிற்சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.