Categories

திருப்பரங்குன்றம் சம்பவம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி:
தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி


தர்மபுரி டிச 14,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் ஆண்டாள் நகர் கலைஞர் திடலில் நடைபெற்ற திரு. பழனியப்பன் மகன் எழில்மறவன் – கீர்த்திகா இணைதிருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக மற்றும் சங்க பரிவார் இயக்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அங்கு பல ஆண்டுகளாக இஸ்லாமியரும் இந்துக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது மதத்தின் பெயரில் வன்முறைக்கு வித்திடும் சதி நடைபெறுகிறது,” என்றார்.அவர்
மேலும்,

“நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு கவலையளிக்கிறது; நீதித்துறையையும் சங்கபரிவார் கோட்டத்தில் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

இதை எதிர்த்து நாடாளுமன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 108 உறுப்பினர்கள், அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மக்களவைத் தலைவரிடத்தில் வழங்கியுள்ளோம்,” என கூறினார்.

திமுக கூட்டணியில் இருக்கிறோம்; விருப்ப மனு அவசரமில்லை
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்றும், விருப்பு மனு கொடுக்கும் அவசியம் தற்போது இல்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.

“உரிய நேரத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியாக வழங்கப்படும் தொகுதிகளை கருத்தில் கொண்டு மனுக்களை சமர்ப்பிப்போம்,” என்றார்.சாதி கணக்கெடுப்பு தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அவர் பேசும்போது, “இந்திய ஒன்றிய அரசே இதை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டபூர்வமான சென்சஸ் ஆகும். பாமகவின் ஒரு பிரிவு இதற்கான கோரிக்கையைக் கொண்டு கடிதம் அனுப்பினாலும், அது தேர்தல் அரசியல் நோக்கத்துடன் இருப்பதாகவே பார்க்கிறேன்,” என்றார்.