
பணிச்சுமையால் மன உளைச்சல் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு – போக்குவரத்துத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

*தருமபுரி, அக்.16-*
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர், மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக போதிய விடுமுறை வழங்காமல் பணிச்சுமை கொடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், மருத்துவமனைக்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோடு அருகே உள்ள பூகானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (48). இவரது மனைவி பூவாத்தா. இந்தத் தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முனுசாமி, பாலக்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதால், மாற்றுப் பணியாக கட்டுப்பாட்டாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக போதிய விடுமுறை வழங்காமல் அதிக அளவில் வேலை வாங்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை உடல்நிலை சரியில்லை என்றும், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் முனுசாமி சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். உடல் சோர்வுடன் காணப்பட்ட அவரை, சக ஊழியர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் கழிவறைக்குச் சென்றவர்கள், முனுசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள், முனுசாமி உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசாருக்கும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். அவரது உடலைக் காண வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













Leave a Reply