
அரூர் நவ 19,
சொந்த நிலத்துக்கு செல்லும் வழியை மறித்து சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி மிரட்டல்!
பழனி, முருகன் கைது – புவனேஸ்வரி தலைமறைவு

அரூர் வட்டம், செல்லம்பட்டி, சங்கிலிவாடி, காவப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயக்குமார் (வயது 39), விவசாயி.
இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான நிலம், அரூர் காவப்பட்டி கிராமம் சர்வே எண் 7/2-ல் உள்ளது. அந்த நிலத்தில் இவரது தந்தை மற்றும் உறவினர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சங்கிலிவாடி பகுதியில், சொந்தமான பட்டா நிலத்துக்கு செல்லும் பொது வழியை மறித்து, சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக விவசாயி ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், 3 பேர் மீது அரூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் *பழனி, முருகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புவனேஸ்வரி தலைமறைவாக உள்ளதாக* போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 16.11.2026-ம் தேதி காலை 7.30 மணியளவில், ஜெயக்குமார் தனது குடும்பத்தினருடன் ராசிபுரத்தில் இருந்து, தனது நிலத்தை பார்வையிடுவதற்காக காரில் வந்துள்ளார். சங்கிலிவாடி சாலையில் இருந்து, அரசு மண் பாதை வழியாக, மதியம் 3 மணிக்கு தனது நிலத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகன், பழனி, முருகனின் மருமகள் புவனேஸ்வரி மற்றும் சிலர் ஒன்றாக சேர்ந்து, அவர்களை வழிமறித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
“ஊரில் யார் போனாலும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால் இந்த வழியாக உங்களுக்கு வழிவிட மாட்டோம். உங்களுடைய அப்பன் சம்பாதித்த சொத்தா? இந்த வழியாக வருகிறீர்கள். நீங்கள் வெளியூர்க்காரர்கள். உங்களுக்கு இந்த வழியில் எந்த உரிமையும் கிடையாது. இது எங்களுடைய பட்டா நிலம். நீங்கள் இந்த வழியாக நடக்கக்கூடாது. பைக்கில் போகக்கூடாது. நீங்கள் இங்கு செல்ல வேண்டுமென்றால் இந்த வழியில் உங்களுக்கு வழி இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்” என்று கூறி, நிலத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது மாவீரன் என்பவர் போன் மூலம் தகவல் சொன்னதை அடுத்து, ஜெயக்குமார் சென்றபோது, அங்கிருந்த புவனேஸ்வரி என்பவர், “நான் வக்கீல், இந்த வழியில் செல்வதற்கு உங்களுக்கு ஆர்டர் கிடையாது. எதற்காக வருகிறீர்கள்? நீங்கள் எல்லாம் ஆம்பளைகளா? ஏற்கனவே இந்த இடத்தில் நடக்கக்கூடாது என்று சொல்லி நாங்கள் தடுத்தோமே, மீண்டும் எதற்காக வருகிறீர்கள்?” என்று இழிவாக பேசியதாகவும், பழனியின் மனைவியும், பழனியின் மகன் குணசீலன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து திட்டியதுடன், சாலையின் குறுக்கே நின்று வழியை மறித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறிது நேரத்தில் அரூர் காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, வழியை விட்டுள்ளனர். மேலும், இருதரப்பினரும் மறுநாள் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என காவலர்கள் கூறியதை அடுத்து, வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் நிலத்துக்கு சென்ற ஜெயக்குமார், மீண்டும் நேற்று 17.11.2026-ம் தேதி காலை 10.15 மணியளவில், அரூர் காவல் நிலையத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, அதே இடத்தில் முருகன் குடும்பத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி, பழனியின் மனைவி, அவர்களது மகன்கள், மருமகள் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சாலையின் குறுக்கே நீண்ட கட்டை ஒன்றை போட்டு வாகனம் செல்ல முடியாதவாறு வழியை மறித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, “கலெக்டராக இருந்தாலும் சரி, ஆர்.டி.ஓ.வாக இருந்தாலும் சரி, எவனாக இருந்தாலும் இங்கு வரட்டும். வருபவர்களை செருப்பால் அடித்து மூடக்கமா இருக்கமாட்டோம் என்று பாருங்கள். உங்களுக்கு வழிவிட முடியாது. நீங்கள் புறம்போக்கு நிலத்தில் வாழ்பவர்கள். ராசிபுரத்தில் இருந்து வருகிறீர்கள். நீங்கள் யார் என்றே தெரியாது. நீங்கள் ஒரு ஜாதி, நாங்கள் ஒரு ஜாதி. உங்களுக்கு நாங்கள் வழிவிட வேண்டுமா? இது என்னுடைய பட்டா நிலம். உங்களுக்கு வழிவிட முடியாது. யாரையெல்லாம் கூட்டிக்கொண்டு வருகிறீர்களோ, அவர்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சாதிய அடிப்படையில் இழிவுபடுத்தியும், மிரட்டியும், தொடர்ந்து வழியை மறித்தும் வந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனால் எங்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இது குறித்து குணசீலன் தனது செல்போன் மூலம் 100-க்கு நேற்று காலை 10.43 மணியளவில் தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும், அந்த புகாருக்கான பதிவு எண் 2397020 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால், சாதி பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, மிரட்டி, வழிமறித்த நபர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், வாகனத்தை எடுத்துச் செல்லுமாறும், ஏதேனும் பிரச்சினை இருந்தால் காவல் நிலையத்திற்கு வந்து பேசுமாறும் கூறி வழியை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழிப்பாதை தொடர்பாக அரூர் கோர்ட்டில், கடந்த 13.10.2026-ம் தேதியில் பொது வழி என உத்தரவிட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, அவதூறாக பேசி, மிரட்டி, நிலத்திற்கு செல்லும் வழியை மறித்து வரும் முருகன், பழனி, புவனேஸ்வரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989-ன் படி வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து மிரட்டி, நிலத்திற்கு செல்லவிடாமல் தடுப்பதுடன், சாலையின் குறுக்கே கட்டையை போட்டு தடுத்து வழிமறித்த நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்கிடவும், இந்த வழக்கை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு உட்பட்ட உரிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில், அரூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 576/2026, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 126(2), 352, 296(b), 351(2) மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் 3(1)(r), 3(1)(s), 3(2)(va) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கை துணை கண்காணிப்பாளர் நிலையில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.














Leave a Reply