Categories

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன் நிறுத்திய டாக்டரின் பைக் திருட்டு!

அரசு மருத்துவக் கல்லூரி முன் நிறுத்திய டாக்டரின் பைக் திருட்டு!
குண்டல்பட்டி அருகே வாகன சோதனையில் திருடன் கைது – மேலும் 2 பைக் திருடியதாக ஒப்புதல்

தர்மபுரி நவ 20,
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவ மாணவரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபரை, குண்டல்பட்டி அருகே வாகன சோதனையில் போலீசார் கைது செய்தனர்.



தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார்.

இவர் கடந்த 18-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள், தனது யமஹா எம்.டி. 15 ரக மோட்டார் சைக்கிளை (பதிவு எண்: TN 29 CW 1399) தர்மபுரி – அரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சி.சி. பிளாக் அருகில் தென் மேற்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைத்திருந்தார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் நேற்று (19-ம் தேதி) மாலை 4 மணிக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குற்ற எண் 893/2026, பி.என்.எஸ். பிரிவு 303(2)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு டாக்டரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாக, ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு குண்டல்பட்டி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், டாக்டரின் பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அவர் தர்மபுரி நகரப் பகுதியில் மேலும் 2 ஸ்பிளெண்டர் வாகனங்களை திருடியதாகவும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.