Categories

பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் வித்யாரம்பம் விழா – 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி




தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு, புதிதாக பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் எழுத்தறிவித்தல் விழா நடைபெற்றது.
கல்வியின் தொடக்கமாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில், பிராமண ஆசாரியர் பங்கேற்று லட்சுமி, சரஸ்வதி, பகவதி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி எழுத்தறிவித்தல் சடங்கு நடைபெற்றது. ஒவ்வொரு

குழந்தையின் நாக்கில் எழுத்தாணியால் “ஹரி ஸ்ரீ கணபதி நமஹ” என எழுதி ஆசீர்வதித்தார். பின்னர், குழந்தைகளின் கைகளைப் பிடித்து அரிசியில் “ஹரி ஸ்ரீ கணபதி நமஹ” என்றும், தமிழ் எழுத்தான ‘அ’ என்றும் எழுத வைத்து கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.


இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு எழுத்தறிவித்தல் சடங்கில் பங்கேற்றனர்.

மேலும், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி சித்ரா கோவிந்தராஜு, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விஜயதசமி நன்னாளில் கல்வியின் முதல் அடியை எடுத்து வைத்த குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.