
தருமபுரி, மே 22:_
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய தகுதிகள் இருந்தும் மாணவர் சேர்க்கை மறுக்கப்படுவதாகக் கூறி, அரூர் அருகே உள்ள ஜெயம் வித்யாலயா தனியார் பள்ளி முன் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகமும், வட்டார வள மையமும் இணைந்து சேர்க்கை மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆர்.டி.இ. சட்டம் 2009-ன் படி, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். எல்.கே.ஜி. சேர ஜூலை 31-ம் தேதி 3 வயது பூர்த்தியாகி 4 வயதுக்குள்ளும், 1-ம் வகுப்புக்கு 5 வயது பூர்த்தியாகி 6 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வி. பாதித்தோர், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை. பள்ளியில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கூறியதாவது: அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் எங்கள் குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர். காலை முதல் குழந்தைகளுடன் காத்திருக்கிறோம். பள்ளி நிர்வாகம் எங்களை மதிக்கவில்லை. விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீதும், கண்டுகொள்ளாத கல்வித்துறை மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் வடிவேலன் கூறும்போது, “பெற்றோரையும் குழந்தைகளையும் மணிக்கணக்கில் காக்க வைப்பது தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.
கடந்த 2025-ம் கல்வியாண்டில் தமிழக அளவில் 9-ம் இடத்தில் இருந்த தருமபுரி மாவட்டத்தின் கல்வித் தரம், கல்வித்துறையின் மெத்தன போக்கால் தற்போது 23-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” குறிப்பிடத்தக்கது.
*அரசுப் பள்ளிகள் படுபாதாளம்: 9-ல் இருந்து 23-க்கு சரிந்த தருமபுரி*
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டம் 14 இடங்கள் பின்தங்கி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 19,919 பேர் தேர்வு எழுதி 18,711 பேர் தேர்ச்சி பெற்று 93.94 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. 2025-ல் 96.31 சதவீத தேர்ச்சி பெற்று 9-வது இடத்தில் இருந்த மாவட்டம், 2026-ல் 23-ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் நிலை இன்னும் மோசம். 2025-ல் 95.13 சதவீத தேர்ச்சி பெற்று 7-ஆம் இடத்தில் இருந்த அரசுப் பள்ளிகள், தற்போது 92.32 சதவீத தேர்ச்சி பெற்று 24-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், தனியார் பள்ளி மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
*சரிவுக்கு காரணம் என்ன?*
பெற்றோர் குற்றச்சாட்டு:
இரட்டை வேடம் போடும் ஆசிரியர்கள்:
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்களாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களே உள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல், தங்கள் தனியார் பள்ளிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேர்வு முறைகேடு:_
சமீபத்தில் நடந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தனியார் பள்ளிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. தேர்வு எழுதும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் தரவரிசை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மீது நிதிச்சுமை:_
அரசுப் பள்ளிகளின் தரம் குறைவால், தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் தள்ளப்படுகின்றனர். கட்டணத்துக்காக சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் குழந்தைகளை படிக்க வைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தகுதியுள்ள குழந்தைகளை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீதும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மீதும், அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி தனியார் பள்ளி நடத்தும் ஆசிரியர்கள் மீதும் தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பேட்டி:
தமிழ்ச்செல்வி














Leave a Reply