Categories

பாலக்கோடு அரசு மருத்துவமனை  தேசிய சுகாதார இயக்கத்தின்   காயகல்ப் ஆய்வில்  முதல் இடம்



தர்மபுரி செப் 25,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு மருத்துவமனை  செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 800 முதல் ஆயிரம் புறநோயாளிகள் மற்றும்  80 முதல் 100  உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில், தேசிய சுகாதார இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ சேவையின் தரம், நோயாளிகளுக்கான வசதிகள், மருத்துவமனை பராமரிப்பு, தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மருத்துவமனைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், 2025-26ம் ஆண்டிற்கான  தமிழக அளவில் நடைபெற்ற மதிப்பீட்டில் பாலக்கோடு அரசு மருத்துவமனை  சிறப்பாக செயல்பட்டதற்காக காயகல்ப விருதை பெற்று முதல் இடம்  பெற்றுள்ளது.
இதற்காக மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, சுகாதாரம் மற்றும் பசுமையை பேணுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் விருதையும் பாலக்கோடு அரசு மருத்துவமனை பெற்றுள்ளது. இதற்காக ரூ.2.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் அவர்களிடம் தேசிய சுகாதார இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களின் ஒருங்கிணைந்த பணியே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டிற்காக கடுமையாக உழைத்த தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பாரதி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு தொடர்ந்து தரமான மருத்துவ சேவையை வழங்குவதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் பராமரித்து வருவதற்கு கிடைத்துள்ள இந்த பாராட்டு  பாலக்கோடு அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது