Categories

மருதமலையில் பக்தர்களுக்கு வழுக்கி விழும் அபாயம் – அபிஷேக நீரால் ஆபத்தான படிக்கட்டுகள்!

கோவை நவ 10,

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாம்பாட்டி சித்தர் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டுகளில், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால், தயிர், நெய் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் வழிந்தோடுவதால் படிக்கட்டுகள் மிகவும் வழுக்கும் நிலையில் உள்ளன.

இதனால் அந்த வழியாகச் செல்லும் பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, இவ்விஷயத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கந்த சஷ்டி விழாவையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் நிலையில், அபிஷேகப் பொருட்கள் மற்றும் கழிவுநீர் படிக்கட்டுகளில் வழிந்தோடுவதைத் தடுக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படாதது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பயத்துடனும் ஒருவித தயக்கத்துடனும் பாம்பாட்டி சித்தர் சன்னதிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அபிஷேக நீர் படிக்கட்டுகளில் வழிந்தோடுவதைத் தடுக்க மாற்றுப் பாதையில் முறையாக வெளியேற்றவும், படிக்கட்டுகளை உடனடியாகச் சுத்தம் செய்து வழுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.