Categories

வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி – 11 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


தர்மபுரி அக் 14,
தருமபுரி மாவட்டம் கடத்தூர், கோபிநாதம்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளில் போலியாக தங்க நகைகள் செய்து அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், 11 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு எண் 55/2025, பிரிவு 303(2) BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மோசடி வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள உத்தரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த
விஸ்வகோபால் மகன் லோகேஷ் வயது 28 என்பவர் தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் உதவி ஆய்வாளர் முனிராஜ் தலைமையில், தலைமைக் காவலர் இளம்பரிதி உள்ளிட்ட போலீசார் தலைமறைவு குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஓசூர் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து, கோபிநாதம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.