
சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த புதுமையான போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள்
ஊட்டி:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊட்டி படகு இல்லத்தில் விளையாட்டு அடிப்படையிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சுற்றுலாத்துறை மற்றும் Hand in Hand India Public Charitable Trust இணைந்து, அக்டோபர் 17 முதல் 20-ஆம் தேதி வரை ஊட்டி படகு இல்லத்தில் இந்நிகழ்ச்சிகளை நடத்தின.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செய்திகளை எளிமையாகவும் சுவாரசியமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கழிவு மேலாண்மை வினாடி வினா, வளையம் வீசும் போட்டி, கழிவு மேலாண்மை புதிர்ப் போட்டி, மறுசுழற்சி குறித்த விளையாட்டு மற்றும் குப்பைத் தொட்டிகளைச் சரியாகப் பயன்படுத்துவது தொடர்பான போட்டி எனப் பல்வேறு புதுமையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விளையாட்டுகளின் வாயிலாக, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சியின் அவசியம், குப்பைகளை உரிய தொட்டிகளில் போடுதல், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விளையாட்டுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் புதுமையான முயற்சி, சுற்றுலாப் பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை அதிகரிப்பதுடன், ஊட்டியைத் தூய்மையான சுற்றுலாத் தலமாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
இந்நிகழ்ச்சிகளில் படகு இல்ல மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். Hand in Hand India Public Charitable Trust நிறுவனத்தின் திட்ட அலுவலர்கள் ஜெயராம், தங்கத்துரை, உஷா, ரம்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஊட்டியின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நகரைத் தூய்மையாகப் பராமரிக்க, பொதுமக்கள், உள்ளூர் வணிகர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நிகழ்ச்சியின்போது வலியுறுத்தப்பட்டது.















Leave a Reply