Categories

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சட்ட தூண்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி அக் 21,
தர்மபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், முறையான விவரங்கள் இல்லாமல் பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் எழுந்துள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக்
கண்டித்து, பாலக்கோடு பேருந்து நிலையம்  முன்பு   சட்டத் தூண்கள் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாக சட்டத் தூண்கள் இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் தேதி, பேருந்து எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் சீட்டுகள் வழங்கப்படுவதாகவும்
இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகார் அளிப்பவர்களையே  அதிகாரி மிரட்டும் வகையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தவர்கள்
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்தும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  சட்டத் தூண்கள்அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டத் தூண்கள் அறக்கட்டளையின் தர்மபுரி மாவட்டத் தலைவர் பி.கே. சிவா தலைமை தாங்கினார்.
சட்டத் தூண்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமான குணசேகரன், மாநிலப் பொருளாளர் காவேரி, மாநிலத் துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும், பயணிகளுக்கு உரிய விவரங்களுடன் பயணச்சீட்டு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்,
புகார்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் பேருந்துகளின் கட்டண வசூல் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டத் தூண்கள் இயக்க நிர்வாகிகள் கௌதம், கணேஷ், முருகன், ரகுபதி, முனிராஜி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  முக்கிய கோரிக்கையாக உள்ளது.


தருமபுரி  மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772