Categories

தருமபுரியில் ஸ்போர்ட்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து – 3 அடுக்கு கட்டிடம் முழுவதும் எரிந்து நாசம்


தர்மபுரி அக் 21,
தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள ஜான்சன் & ஜான்சன் ஸ்போர்ட்ஸ் மற்றும் துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 அடுக்கு கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தருமபுரி நகரின் முக்கிய சாலையான நேதாஜி பைபாஸ் சாலையில் பிடமனேரி பிரிவு சாலை அருகே இந்த கடை செயல்பட்டு வருகிறது. இன்று மாலை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி 3 அடுக்கு கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பைபாஸ் சாலையிலும் புகை பரவியதால் சாலை தெரியாத அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது.

முக்கிய போக்குவரத்து சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ அருகில் இருந்த ஸ்வீட் கடை மற்றும் துணிக்கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த விளையாட்டு பொருட்கள், துணிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தருமபுரி  மாவட்டம்
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772