Categories

மத்தூர் சுங்கச்சாவடி அருகே பயங்கர விபத்து: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி – இருவர் படுகாயம்

கிருஷ்ணகிரி அக் 26,

மத்தூர் சுங்கச்சாவடி அருகே பயங்கர விபத்து: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி – இருவர் படுகாயம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டம், மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள பிரபு ஓட்டல் முன்பு இன்று (அக்.26) காலை சுமார் 7.45 மணியளவில் பயங்கர விபத்து ஏற்பட்டது.



கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி TN 09 F 4626 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். எதிரே TN 25 CT 8904 என்ற பதிவு எண் கொண்ட பஜாஜ் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில், ஒரு வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியது.


இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருச்செல்வம் (21), தந்தை பெயர் கார்த்திகேயன் மற்றும் திருப்பதி (17), தந்தை பெயர் ரமேஷ், எஸ்.பட்டி கிராமம், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எதிரே வந்த வாகனத்தில் பயணித்த மோதகல் கிராமம், தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேலு (18), தந்தை பெயர் ராஜா மற்றும் சாரதி (24), தந்தை பெயர் ராஜா ஆகிய இருவரும் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். இருவரும் மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், விபத்தில் சிக்கிய வாகனத்தில் சுமார் 100 பழைய செல்போன்கள் இருந்தது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் பழுதடைந்த செல்போன்களை வாங்கி பெங்களூரில் மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த செல்போன்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மத்தூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.