Categories

தருமபுரி அருகே 450 ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோயில் உண்டியலை திறக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் – பொதுமக்கள் முற்றுகை!!

தருமபுரி, அக்.29:

தருமபுரி அருகே மல்லிக்குட்டை பகுதியில் அமைந்துள்ள 450 ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோயில் உண்டியலை திறக்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தருமபுரி அடுத்த மல்லிக்குட்டை பகுதியில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் திருக்கோயில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 189 கிராம மக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது. இக்கோயிலை 18 கோம்பு வகையறாவினர் இணைந்து நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், 18 கோம்பு வகையறாவைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஹரி பூபதி ஆகியோர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்ற வகையறாவினரின் கருத்துகளை கேட்காமல் அறநிலையத்துறை கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் தங்களது கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகக் கூறி, செயல் அலுவலர் கீதாஞ்சலி தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஒருமுறை உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று மீண்டும் கோயில் உண்டியலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

இதைக் கண்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உண்டியலை திறக்க வந்தது ஏன்?” என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியலை திறக்காமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “189 கிராமங்களைச் சேர்ந்த எங்கள் வகையறாவினருக்கு சொந்தமான இந்த கோயிலை எங்களது சொந்த செலவில் பராமரித்தும், திருப்பணிகளை மேற்கொண்டும் வருகிறோம். ஒரு சிலரின் புகாரின் அடிப்படையில் கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு இருக்கும்போது அதிகாரிகள் மீண்டும் உண்டியலை திறக்க வந்தது ஏன்? நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும்” என்றனர்.

*பேட்டி: முனுசாமி, கோயில் அறக்கட்டளை செயலாளர்*