Categories

தருமபுரியில் அதிகரிக்கும் நிதி நிறுவன மோசடிகள் – தீவிர நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்



*தருமபுரி, அக்.29:*

தருமபுரி மாவட்டத்தில் நிதி நிறுவன மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் அக்டோபர் 29-ம் தேதி தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், சோ.அர்ச்சுனன், வே.விசுவநாதன், தி.வ.தனுசன், ஜி.சக்திவேல் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

*கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:*

*நிதி நிறுவன மோசடிக்கு கண்டனம்:*

நல்லம்பள்ளி பகுதியில் ரத்னா சிட் பண்ட்ஸ், கயல் சிட் பண்ட்ஸ் ஆகிய தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனங்களில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முதிர்வுத் தொகையையோ அல்லது சீட்டுப் பணத்தையோ வாடிக்கையாளர்களுக்கு திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இந்த மெகா மோசடியின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நல்லம்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்துள்ளனர். மாவட்டத்தில் அதிகரிக்கும் இத்தகைய மோசடிகளை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*நவ.3-ல் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்:*

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி விலை கடந்த மாதத்தில் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. புழுங்கல் பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ.19 வரை அதிகரித்துள்ளது. பைன் மற்றும் சூப்பர் பைன் ரக அரிசி கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.134.23, வெங்காயம் கிலோ ரூ.59.28, பாமாயில் லிட்டர் ரூ.160.28 என விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ.70, 500 மில்லி தயிர் ரூ.40 என உயர்ந்துள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நவம்பர் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

*உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கோரி ஆர்ப்பாட்டம்:* உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நவம்பர் 17-ம் தேதி தருமபுரி, அரூர் நகராட்சிகள், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

*மற்ற தீர்மானங்கள்:* நவம்பர் 7-ம் தேதி புரட்சி தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கட்சி அலுவலகங்கள் முன்பு கட்சிக் கொடி ஏற்றுவது, காவிரி உபரி நீர்த் திட்டம், தருமபுரி – மொரப்பூர் ரயில் இணைப்பு, தொழிற்பேட்டை உள்ளிட்ட மாவட்ட வளர்ச்சி கோரிக்கைகளையும், பட்டா, குடிநீர், சாலை, போக்குவரத்து, 100 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மாவட்டத்தில் 100 மையங்களில் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் போராட்டம் நடத்தி அதிகாரிகளிடம் மனு அளிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.