Categories

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை வழக்கு பதிவு


தர்மபுரி அக் 31,
தருமபுரி மாவட்டம் ராஜாபேட்டையில் உள்ள சி.கே.எம். பாரத் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஆதிதிராவிடர் ஊழியரை சாதி பெயரை கூறி திட்டி வன்கொடுமை செய்ததாக, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டது.



தருமபுரி வட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரா.அருண்குமார் 37 என்பவர் அந்த பெட்ரோல் பங்கில் கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்.26ம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல் பணியில் இருந்தபோது, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் அவரது பி.ஏ. லோகேஷ் ஆகியோர் காரில் வந்து பெட்ரோல் பங்கிற்குள் புகுந்துள்ளனர்.



பெட்ரோல் போட வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், பணியில் இருந்த அருண்குமாரை ஆபாசமாகவும், சாதி பெயரை கூறியும் திட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட சக ஊழியர் நந்தகுமார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அன்பு ஏஜென்சி உரிமையாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுடன் வந்த 30க்கும் மேற்பட்டோர் சேர்ந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் அருண்குமார், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையிலான விசாரணைக்கு பின்னர், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமனிடம் கேட்டபோது, வழக்கின் உண்மைத் தன்மை குறித்து தருமபுரி நகர பி-1 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.