Categories

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை புகார் – பெட்ரோல் பங்க் ஊழியரை சாதிப் பெயரைக் கூறி திட்டி தாக்குதல்; எஸ்.பி.யிடம் புகார்!

தருமபுரி, அக்.30:_

தருமபுரி மாவட்டம், ராஜாபேட்டையில் உள்ள சி.கே.எம். பாரத் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஆதிதிராவிடர் ஊழியரை சாதிப் பெயரைக் கூறி திட்டி, வன்கொடுமை செய்ததாக *பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி* மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி வட்டம், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ரா.அருண்குமார் (37) என்பவர், அந்த பெட்ரோல் பங்கில் கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்.26-ம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம்போல் பணியில் இருந்தபோது, *அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி* மற்றும் அவரது பி.ஏ. லோகேஷ் ஆகியோர் காரில் வந்து பெட்ரோல் பங்கிற்குள் புகுந்துள்ளனர்.

பெட்ரோல் போட வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், பணியில் இருந்த அருண்குமாரை ஆபாசமாகவும், சாதிப் பெயரைக் கூறியும் திட்டியுள்ளார். இதை தட்டிக் கேட்ட சக ஊழியர் நந்தகுமார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், அன்பு ஏஜென்சி உரிமையாளரும், *அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுடன்* வந்த 30-க்கும் மேற்பட்ட நபர்களும் சேர்ந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் அருண்குமார், *பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி* உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.