
தர்மபுரி, நவ. 10 –
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மாதேமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பழமையான சோழராஜன் ஏரியில், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு கிருஷ்ணகிரி மாநகராட்சி ஆணையர் சேகர் (தந்தை பெயர்: ராமன்) தான் காரணம் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மாதேமங்கலம், குட்டூர், புதூர், வெங்கட்டம்பட்டி, கோவிலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

கோடி கால்வாயை மூடி பாதை அமைக்க முயற்சி:
ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் கோடி கால்வாய் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, கால்வாயை மூடி பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு, பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, ஆக்கிரமிப்பு புகார் மற்றும் கால்வாய் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
*கிராம மக்கள் குற்றச்சாட்டு:*
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,
“இந்த இடத்தை கம்பி வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்தவர் கிருஷ்ணகிரி மாநகராட்சி ஆணையர் சேகர் தான். அவர் தான் தற்போது இந்த வேலையை செய்கிறார்.
கோடி பகுதியில் 20 அடி அகலத்தில் கல் போட்டு, அந்த இடத்தை முழுமையாக சாலையாக மாற்றி பட்டா செய்துள்ளனர். கடந்த வாரம் 10 நாட்களுக்கு முன்பே புதிய பட்டா பதிவாகியுள்ளது.
இடையில் சுமார் 80 ஏக்கர் வரை யு.டி.ஆர் பட்டா மூலம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கரை அமைத்து விட்டனர். நாங்கள் 50 ஆண்டு கால ஆவணங்களை சேலம் வரை சென்று சரிபார்த்தோம்.
தற்போது உபரி நீர் வெளியேறும் இடம் வரை கல் போட்டு முழுமையாக ஆக்கிரமிப்பு செய்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் ஆக்கிரமிப்பில் இல்லை. தற்போது புதிதாக 2 முதல் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து புதிய பட்டா வாங்கியுள்ளனர்” என்றனர்.
*100 ஆண்டு ரெக்கார்டை எடுத்து சர்வே செய்ய வேண்டும்:*
“இந்த ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்றால், 100 ஆண்டுகால ரெக்கார்டை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் அந்த ரெக்கார்டை எடுத்து, எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதை முழுமையாக கண்டறிந்து, ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
1982-ல் யு.டி.ஆர் பட்டா வழங்கும்போது முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரிந்து 60 ஏக்கருக்கும் மேல் உள்ளது. இன்னும் அதிகமாக கூட இருக்கலாம். 100 ஆண்டு ரெக்கார்டு மற்றும் எப்.எம்.பி வைத்து சர்வே செய்தால் தான் முழு பரப்பு தெரியும்.
இந்த ஏரியின் லெட்ஜர் பராமரிக்க பொதுப்பணித்துறையில் அலுவலகம் உள்ளது. 100 ஆண்டு, 500 ஆண்டு ரெக்கார்டுகள் கூட அங்கு உள்ளன. அங்கிருந்து ரெக்கார்டை எடுத்து வந்து நீதிமன்றத்தை நாடியோ, ஏற்கனவே ஏரி ஆக்கிரமிப்புகளை ரத்து செய்தது போல் நடவடிக்கை எடுத்து, ஏரியை முழுமையாக மீட்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.
*கரை உடையும் அபாயம் – வெள்ள அச்சம்:*
“நாங்கள் சிறு வயதில் பார்க்கும்போது பக்கத்தில் உள்ள கிணறு வரை தண்ணீர் நிற்கும். தற்போது அந்த இடம் வரை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். 2023, 2024-ல் வந்தது போல் மீண்டும் பெரிய வெள்ளம் வந்தால், உபரி நீர் வெளியேற வழி இல்லாமல் கரை உடைந்து பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டுமின்றி அன்னசாகரம், பழைய தருமபுரி உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்று அச்சம் தெரிவித்தனர்.
*கிராம மக்கள் கோரிக்கை:*
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சோழராஜன் ஏரியை முழுமையாக நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவற்றை அகற்றி, ஏரியின் கோடி கால்வாயை முறையாக சீரமைத்து நீர்வழிப்பாதையை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதை பெரிய போராட்டமாக மாற்ற தயாராக உள்ளதாகவும் எச்சரித்தனர். நாளை காலை 9 மணிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சர்வே செய்வதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.
ஏரியை பாதுகாக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆக்கிரமிப்பு புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.














Leave a Reply