Categories

டிஜிபி அதிரடி உத்தரவு: தர்மபுரியில் நேரடி சோதனை : 13 பேர் கைது- 8 பேர் வங்கி கணக்கு முடக்கம்!

தர்மபுரி நவ 17,

டிஜிபி அதிரடி சுற்றறிக்கை எதிரொலி – தருமபுரியில் 3 நாட்கள் தீவிர சிறப்பு சோதனை 97 பேரிடம் நேரடி சோதனை – 13 வழக்குகள் பதிவு – 13 பேர் கைது – 8 பேரின் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் கடந்த 13-ம் தேதி அவசர சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார்.

அந்த சுற்றறிக்கையில், “போதைப் பொருள் உட்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அதேபோல், மத்திய விசாரணை அமைப்புகள் ஏதேனும் ஒரு பகுதியில் போதைப் பொருட்களை கைப்பற்றினாலும், அந்த பகுதியின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். c320

மேலும், “காவல் பிரிவு அதிகாரிகள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநில அளவில் மட்டுமன்றி, மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பு அதிரடி சோதனைகள், தேடுதல் வேட்டைகளை திட்டமிட்டு நடத்த வேண்டும்” எனவும் அந்த சுற்றறிக்கையில் உத்தரவிட்டிருந்தார். c320

இந்த சுற்றறிக்கை வெளியான அதே நாளில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை தொடங்கியுள்ளது.

*தருமபுரியில் 3 நாட்கள் சோதனை:*

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவின்பேரில், கடந்த 13.11.2026 முதல் 15.11.2026 வரை தொடர்ந்து 3 நாட்கள் தீவிர சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையின்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் 145 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 97 நபர்களை காவல்துறையினர் நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 8 நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 நபர்களின் வங்கி கணக்கு விவரங்களை கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*எஸ்.பி. எச்சரிக்கை:*

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற தீவிர சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

டிஜிபியின் சுற்றறிக்கைக்கு பிறகு, மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.