
தர்மபுரி நவ 19,
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசிய அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மீது, தமிழக காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அரூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டேன். தளபதியினுடைய முகத்திற்காக 63,000 வாக்குகள் நமக்கு கிடைத்துள்ளது.
இப்போது மக்களுடைய குறைகளை கேட்டு, அந்த குறைகளை தீர்ப்பதற்காக என்னுடைய மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி அரூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் சம்பத்குமார் அவர்கள், கடுமையான சொற்களை பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சனம் செய்திருக்கிறார்.
அந்த பொது மேடையில், பொதுமக்களுக்கு முன்னால், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தில், அவர்கள் போதை வஸ்து பயன்படுத்துகிறார்கள் என்று அவதூறான ஒரு பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது
தமிழக காவல்துறை தாமாக முன்வந்து, தவறான அவதூறு பரப்பிய சம்பத்குமார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அது மட்டுமல்ல, 18 வயதில் இருந்து 30 வயது வரை இருக்கக்கூடிய வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகளை இழிவுபடுத்தக்கூடிய நோக்கத்தில், “இந்த 18 வயதில் இருந்து 30 வயது இருக்கிறவங்க எந்த ஒரு ரேஷன் கடைக்கும் போனதில்லை, கரண்ட் பில் கட்டினது இல்லை, அவங்களுக்கு எதுவுமே தெரியாது” என்று, ஜனநாயக கடமை ஆற்றிய வாக்காளர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சொன்ன சொற்களை அவர் திரும்பப் பெற வேண்டும். அவர் சொன்ன வார்த்தைகள் மிகப்பெரிய கண்டனத்துக்குரியது
இந்த விஷயத்தை கட்சியினுடைய தலைமையிடத்திற்கு கொண்டு போய், வழக்கு தொடுப்பதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். தமிழக காவல்துறை தாமாக முன்வந்து இவர் மீது வழக்கு தொடர்ந்து செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*சம்பத்குமார் பேசியதாவது:*
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதில், அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே.சம்பத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:
இன்று சட்டமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. எந்தத் திட்டங்களும் நிறைவேறாத நிலை உள்ளது.
சட்டப்பேரவையும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது, சட்டம் ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. முன் அனுபவம் இருந்தால்தானே, என்ன நடந்தது, என்ன பிரச்னை வந்தது என்று தெரியும்.
மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சியை மாற்றினார்கள். ஆனால், அந்த மாற்றத்தின் விளைவால் இன்று மக்கள் சிக்கிக் கொண்டார்கள்.
இன்று ரேஷன் அரிசி, நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. பேருந்து உரிமையாளர்கள் எல்லாம் சாலையில் நிற்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியும் மேடை போட்டுப் பேசக்கூடாது என்ற நிலை இருந்தது. அவர்களே வெற்றி பெற்ற பிறகு அவர்களே சென்றுவிடுவார்கள் என்று நினைத்தோம்.
ஒரே ஒரு எம்.எல்.ஏ. கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் வாக்கு கேட்டுப் பேசினேன். ஆனால், சட்டப்பேரவைக்குச் சென்று பார்த்தால், ஒரு எம்.எல்.ஏ. கூட அப்படி இல்லை.
நம் அமைச்சர்கள் எல்லாம் வந்த உடனே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் பணிகளை விரைவாகச் செய்வார்கள். ஆனால், இன்று கேட்பதற்கு யாரும் இல்லை.
என்னை நம்பி வாக்களித்த மக்கள், கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே வருமானம் இல்லாமல் கூட எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.
இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இன்று ஆட்சி நடத்துபவர்களை நேரடியாகப் பார்த்தேன்.
எனவே, மக்களின் குறைகளைத் தீர்க்க, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.














Leave a Reply