
தர்மபுரி நவ 20,
பொதுமக்களின் சேமிப்பை பாதுகாக்க சீட்டு நிதி நிறுவனங்கள் மீது தீவிர கண்காணிப்பு!
எஸ்.பி. ஏ.கே.அருண் கபிலன் தலைமையில் ஆட்சியர், அதிகாரிகள் கலந்தாய்வு – பதிவு இல்லாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் சீட்டு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களின் சேமிப்பைப் பாதுகாக்கவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன்*ஆகியோர் இணைந்து பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் உடன் இருந்தார்.
இக்கூட்டத்தில், சீட்டு நிதி நிறுவனங்கள் உரிய பதிவுடன், சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்வது, நிதி முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் முதலீட்டைப் பாதுகாப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வருவாய்த்துறை, பதிவுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் செயல்படும் சீட்டு நிறுவனங்களின் பட்டியல் தயாரித்து, அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, அரசு விதிமுறைகளை மீறி அதிக வட்டி மற்றும் அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஏ.கே.அருண் கபிலன் அறிவுறுத்தினார்.
பதிவு இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள், பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.
பதாபொதுமக்களுக்கு எச்சரிக்கை:
பொதுமக்கள் சீட்டு நிறுவனங்களில் சேருவதற்கு முன்பு அவற்றின் பதிவு மற்றும் அனுமதி விவரங்களைச் சரிபார்க்கவும், அதிக லாபம் தருவதாகக் கூறப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், சீட்டு நிறுவனங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது மோசடி புகார் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலோ தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.














Leave a Reply