Categories

கோவையில் வேலை செய்த தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 168 சவரன் தங்க நகைகளை திருடிய வடமாநில இளைஞர்

கோவை நவ 20,

“வேலை பார்த்த நிறுவனத்திலேயே கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர்: 1,346 கிராம் தங்க நகைகளை அபேஸ் செய்த நபர் மீது வழக்குப்பதிவு – கோவை ஆர்.எஸ். புரத்தில் பரபரப்பு!

நள்ளிரவு 1 மணி அளவில் சுமார் 168 சவரன் தங்கத்தைத் திருடிச் சென்ற மேற்கு வங்க வாலிபர்: ஆர்.எஸ். புரம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர வலைவீச்சு!

கோவை, ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர், அங்கிருந்த 1,346.31 கிராம் (சுமார் 168 சவரன்) தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஆர்.எஸ். புரம் பகுதியில் ஸ்மித்தேஸ் என்பவருக்குச் சொந்தமான ‘எஸ்.எம். ஜுவல் கிராப்ட்’ (SM Jewel Craft) என்ற தங்க நகை உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மருபில்லா காஷி (21) என்பவர் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 20) அதிகாலை சுமார் 1:00 மணி அளவில், நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த 1,346.31 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மருபில்லா காஷி யாருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு அங்கு இருந்து தப்பியோடி உள்ளார்.

தங்க நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்மித்தேஸ், இது குறித்துக் கோவை மாநகர பி2 ஆர்.எஸ். புரம் (B2 R.S. Puram) குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்,  ஆர்.எஸ். புரம் குற்றப்பிரிவு போலீசார் குற்ற எண்: 576/2026, BNS பிரிவு 306(3) (பழைய IPC பிரிவு 381 – பணியாளர் திருட்டு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

திருடப்பட்ட சுமார் 168 சவரன் தங்க நகைகளுடன் தப்பியோடிய மேற்குவங்க வாலிபர் மருபில்லா காஷியைக் கைது செய்யக் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.