
உதகை, நவம்பர் 27:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று, நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜகவினர் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

உதகை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உதகை பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் தலைமை தாங்கினார். பாஜக மாவட்டத் தலைவர் தருமன், முன்னாள் மாவட்டத் தலைவரும் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதகை நகர பாஜக மண்டலத் தலைவர் ரித்து கார்த்திக் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழக அரசுக்கு போஜராஜன் கண்டனம்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், தமிழகத்தில் இன்று மகிழ்ச்சியான நாள் என்றும், குறிப்பாக ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய நாள் என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அறங்காவலர் குழுவை நீக்கி, புதிய அறங்காவலர் குழுவை நியமித்துத் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்திற்குச் சென்று பூஜை மேற்கொள்ள முயன்றபோது, கோத்தகிரியில் தன்னைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு இனிவரும் காலங்களில் ஈடுபடக் கூடாது என்றும், இந்து மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பேட்டி: போஜராஜன், உதகை பாஜக சட்டமன்ற உறுப்பினர்.
செய்தியாளர்: தமிழ் வெங்கடேசன் KOVAI – NILGIRI NEWS 24X7 பதிவு எண்: TNBIL/25/A4377














Leave a Reply