Categories

கோவை மாவட்ட நீர்நிலைகளில் சாதிய பெயர்களை நீக்க வலியுறுத்தல்!


கோவை நவ 23,
கோவை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள சாதிய பெயர்களை மாற்றி/அகற்றி, பொதுவான பெயர்களை வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார்* மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் பெயர்கள் இருக்கிறது. குறிப்பாக, சரவனம்பட்டி அருகே உள்ள வண்ணான் குட்டை, மதுக்கரை பகுதியில் உள்ள சக்கிலிச்சி குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் பெயர்களை மறுபரிசீலனை செய்து, சாதி அடையாளங்கள் இல்லாத பொதுவான பெயர்களை சூட்ட வேண்டும்.

மேலும், தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் *தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சாதி அடையாளங்களை கொண்ட பெயர்களை மாற்றி அமைப்பதற்கு  அரசாணை (நிலை) எண்:313, நாள் 06.10.2025 வழிகாட்டு நெறிமுறைகள் இடப்பட்டுள்ளன.*

இதில், நீர் நிலைகளுக்கு பூக்கள், பறவைகள் பெயர் சூட்டுவதையும் அரசு பரிந்துரைத்துள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் பெயர்களையும் ஆய்வு செய்ய வேண்டும். சாதிய அடையாளங்களை கொண்ட பெயர்களை அரசாணையின் வழிகாட்டுதலின்படி மாற்ற வேண்டும் எனவும்.

உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, இயற்கை, பல்லுயிர் வளம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் புதிய பெயர்களை சூட்ட வேண்டும் என்றும்.கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நீர்நிலைகளுக்கு இயற்கையையும், சமத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மல்லிகைக் குட்டை, செம்பருத்திக் குட்டை, மகிழம்பூக் குட்டை, முல்லைக் குட்டை, கொன்றைக் குட்டை போன்ற பெயர்களை சூட்டலாம் எனவும் வழக்கறிஞர் அசோக் குமார் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.