

கோவை நவ 27,
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆண்டுகளுக்கு 543 ஆகவே நிலைநிறுத்தி, தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து நவ. 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாம் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நவம்பர் 27-ஆம் தேதியை ஈழ விடுதலைப் போராட்டத்தை நினைவுகூரும் மாவீரர் நாளாக உலகத் தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்குத் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைக் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்திய அளவில் பல்வேறு பிரச்சினைகளில் முன்னோடியாகச் செயல்பட்டு, பிற கட்சிகளை ஒருங்கிணைத்த கட்சி திமுக. கடந்த முறை இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதில் திமுக முக்கியப் பங்காற்றியது. இந்த முறையும் மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும். வரலாற்றுப் பிழையைத் திமுக செய்யாது என்று நம்புகிறேன். கடந்த முறை எடுத்த நிலைப்பாட்டையே இந்த முறையும் திமுக எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி’ என்ற அணுகுமுறையின் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையைக் கொண்டுவர முயற்சி செய்வார்கள். அதன் வழியாக ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைக் கொண்டுவருவார்கள். இந்த மசோதா தேசத்திற்கே ஆபத்தானது.
இப்போதே நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்களால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச முடிவதில்லை. இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளுக்குப் பெரும்பாலான கூட்டத்தொடர்களில் விவாதங்களில் பேச வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஐந்து ஆண்டுகளில் ஐந்து முறை பேச வாய்ப்புக் கிடைத்தாலே பெரிது என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் தொகுதி மறுவரையறை அவசியமில்லை.
வட இந்திய மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றாலே பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்பதற்கான ஏற்பாடாக இதை அரசியல் வல்லுநர்கள் பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தேசியப் பார்வையோடு அணுக வேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே நிலைநிறுத்தி, அதில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மகளிரின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக உயர்த்தவும் முயற்சிக்க வேண்டும். தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை நிலைநிறுத்துவதே நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.














Leave a Reply