Categories

விபத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மனமகிழ் மன்றம் – உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்?




அரூரில் தனியார் மனமகிழ் மன்றத்தால் தொடர் சர்ச்சை – தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் முதல் நீண்ட வரிசையில் மது வாங்கும் அவலம் வரை!

தருமபுரி, நவ.2-

தருமபுரி மாவட்டம் அரூரில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றம் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம், விதிமீறி மது விற்பனை, டாஸ்மாக் வேலை நிறுத்தத்தால் தனியார் பாரில் அலைமோதிய கூட்டம் என மூன்று கோணங்களில் அரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மனமகிழ் மன்றம் – உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்?

தருமபுரி மாவட்டம் அரூரில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து மிகுந்த பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த மன்றத்திற்கு வருவோர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக செல்கின்றனர். ஏற்கனவே விபத்து மிகுந்த பகுதியாக கருதப்படும் அந்த இடத்தில் இதனால் எந்த நேரமும் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை அருகில் மனமகிழ் மன்றம் வைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்காத நிலையில், விதிகளை மீறி எப்படி செயல்படுகிறது என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் உறுப்பினர்கள் மட்டுமே மது அருந்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்களே புகார் கூறுகின்றனர்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவும், வருவாய் நிர்வாகமும் வேடிக்கை பார்க்காமல் உயிரிழப்பு ஏற்படும் முன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தனியார் பாரில் அலைமோதிய கூட்டம் – கோட்டாட்சியர், டி.எஸ்.பி., ஆய்வு; பார் மூடல் – பாதுகாப்பு கொடுத்த அதிகாரிகள்

அரூரில் நேற்று மதியம் முதல் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதியடைந்த மதுப்பிரியர்கள் அரூரில் உள்ள தனியார் மதுபான பாரை நோக்கி படையெடுத்தனர். வழக்கத்திற்கு மாறாக ஏராளமானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த கோட்டாட்சியர் செம்மலை நேரில் ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விற்பனையை நிறுத்தி பாரை மூட நடவடிக்கை எடுத்தனர்.

சுமார் 2 மணி நேர இடைவெளிக்கு பிறகு போலீசார் பாதுகாப்புடன் வரிசையில் நிற்க வைத்து மதுபானம் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க மதுப்பிரியர்களுக்கு பாதுகாப்பு அளித்து கோட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி., நேரடியாக நின்று ஒழுங்குபடுத்தினர்.

பார் மூடப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

மானத்தை விட குடியே கவுரவமா? முகத்தை மூடிக்கொண்டு வரிசையில் நின்ற குடிமகன்கள் – பொதுமக்கள் வேதனை

டாஸ்மாக் வேலை நிறுத்தத்தால் தனியார் பாரில் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்களின் செயல் வேதனையை ஏற்படுத்தியது.

அரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

மானத்தை விட குடிப்பதே கவுரவம் என கருதி, சுயமரியாதையை இழந்து முகத்தை மறைத்துக்கொண்டும், மூடிக்கொண்டும் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது முகம் கேமராவில் பதிவாகிவிடக்கூடாது என முகத்தை திருப்பிக்கொண்டு சென்ற காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்கி மதுபாட்டில் வாங்க வரிசைப்படுத்துவது வேதனை அளிப்பதாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பேசிக்கொண்டே சென்றனர்.