Categories

அரூர் அரசு மருத்துவமனையில் அலட்சியம் – நெஞ்சுவலியுடன் வந்தவர் உயிரிழப்பு.



*கலெக்டர் ரகசிய ஆய்வுக்கு பிறகும் அலட்சியம் தொடர்கிறது – தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை*



*தருமபுரி, நவ.3-*

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லாததால் நெஞ்சுவலியுடன் வந்தவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் ரகசிய ஆய்வு செய்த பிறகும் அலட்சியப் போக்கு தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



*ஒரு மணி நேரம் அலைக்கழிப்பு – உயிரிழந்த பரிதாபம்*

அரூர் அருகே கொளகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சென்னு. இவர் நெஞ்சுவலி காரணமாக அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.



அப்போது அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது. பணியில் இருந்த செவிலியர் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவ சீட்டு வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். மருத்துவ சீட்டு வாங்கி வருவதற்குள் சுமார் ஒரு மணி நேரம் ஆனதால் நெஞ்சுவலி முற்றி சென்னு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். “மருத்துவர்கள் இல்லாததாலும், செவிலியர்களின் அலட்சியத்தாலும் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. பாதிப்பின் தன்மையை உணராமல் அலைக்கழிக்கின்றனர்” என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் சின்னண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

*கலெக்டர் ரகசிய ஆய்வு செய்தும் தொடரும் அலட்சியம்*

அரூர் அரசு மருத்துவமனையில் பல மருத்துவர்கள் இருந்தும் ஒருவரே பொறுப்பு மருத்துவ அலுவலராக நீண்ட காலமாக நீடிப்பதாகவும், இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், முதல்வருக்கே மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரூர் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்தும், பொறுப்பு மருத்துவ அலுவலரை பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தின.

இதன் எதிரொலியாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் அரூர் அரசு மருத்துவமனையில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். ஆனால் ரகசிய ஆய்வுக்கு பிறகும் இதுபோன்ற அலட்சியப் போக்கு தொடர்ந்து நடந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே மக்கள் நலன் கருதி அரூர் அரசு மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, அலட்சியமாக செயல்படுவோர் மீது தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.