
தருமபுரி, நவ.3-
தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம் கே.வேட்டரப்பட்டி ஊராட்சி ஈச்சம்பாடி சந்தைத் தோப்பு பகுதியில் 40 ஆண்டுகளாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கக் கோரி, கிராமப் பெண்கள் காலி குடத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட முடி வாங்கும் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வருவாய்த் துறை மூலம் நிலம் வழங்கப்பட்டு வீடு கட்டி வசித்து வரும் இவர்களுக்கு, அடிப்படை வசதியான குடிநீர் கூட பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இதனால் குடிநீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிர்ப்புற குடியிருப்புக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கி கை, கால் முறிவு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. மழைக்காலத்தில் மழைநீரை சேகரித்து வடிகட்டி குடிக்கும் அவல நிலையும் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலி குடங்களுடன் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, “தண்ணீர் கொடுங்கள்” என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் சிலம்பரசன், “என்னிடம் சொல்லாமல் ஏன் பி.டி.ஓ.விடம் வந்தீர்கள்?” என அச்சுறுத்தும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த விவசாய தொழிற்சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
“முடி வாங்கும் தொழில் செய்கிறோம் என்பதாலேயே எங்கள் பகுதிக்கு ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட எந்த அரசு அலுவலரும் வருவதில்லை” என பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.














Leave a Reply