Categories

தமிழகத்தில் நதிகளை இணைக்க கூடுதல் நிதி ஒதுக்குக – தமிழக ஜனதா தளம் வலியுறுத்தல்



தருமபுரி, அக்.18-

தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி அருகே உள்ள ராசிமணல் பகுதியை பார்வையிட்டேன். 1961-ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது ராசிமணலில் அணை கட்ட அடிக்கல் நாட்டினார். பின்னர் அத்திட்டத்தை திராவிட கட்சிகள் கிடப்பில் போட்டுவிட்டன. அங்கு அணை கட்டினால் 12 மாவட்டங்கள் பயன்பெறும். தென்பெண்ணை, பாலாறு ஆறுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். விவசாயம் செழிக்கும். கர்நாடகாவிற்கு அடுத்து நாம் அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. எனவே முதல்வர் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் வழங்கவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி நீர்வழிப் பாதைகளை சீரமைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரிசி பதுக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மகிழன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.